Tuesday, March 31, 2020

கொரோனா தந்தபாடமும் எங்கள் புறநானூற்றுப் பாடலும்…

இத்தாலி சாலையில் வீசிஎறிந்த பணக்கட்டும் கொரோனா தந்தபாடமும் எங்கள் புறநானூற்றுப் பாடலும்…
“நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!“ எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறதோ!.. ஆம் திருவிளையாடல் படத்தில் தருமியின் பாடலில் பிழை இருப்பதாக குற்றம் சாட்டி, பாடலை எழுதியது கடவுளே! என்றாலும் குற்றம் குற்றமே என்று ஆன்றோர் சபையில் முழங்கிய நக்கீரரின் தமிழ்மொழிப் பற்றுக்கு இது ஓர் உதாரணம்.
இப்படி ஆயிரமாயிரம் உதாரணம் சொல்லலாம். தமிழ்மொழியின் மீது தீராத பற்றும் காதலும் கொண்ட பலபேர் இம்மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உடம்பு இம்மண்ணுக்குள் உரமாக இருக்கலாம் அவர்களின் அனுபவங்களும் பாடல்களும் இன்றும் எங்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கின்றன.
புறநானூறு பண்டையத் தமிழகம் முழுவதும் வாழ்ந்த பெரு வேந்தர்கள் , குறுநில மன்னர்கள் , சால்பமைந்த பெரியோர்கள், புலவர்கள் எனப் பலரைப்பற்றியும் பாடிய நானூறு பாடல்களைக் கொண்டது. இந்நூல் பண்டையத் தமிழகத்தின் அரிய வரலாற்றுத் தொகுப்பு; பண்பாட்டுக் களஞ்சியம்; இலக்கியக் கருவூலம். பண்டையத் தமிழகத்தின் கோநகரங்கள், துறைமுகங்கள் , கடற்கரைகள் , காடுகள் பற்றிய புறப்பொருள் சார்ந்த செய்திகளும் புறநானூற்றுப் பாடல்களில் காணப்படுகின்றன. புரவலர்கள் புலவர்களைப் போற்றி அவர்களின் அறிவுரைகளைச் செவிமடுத்து ஒழுகிய சிறப்புகளும் , அறமுறை பிறழாது மன்னர்கள் நிகழ்த்திய போர்முறைகளும் , மார்பிலே விழுப்புண்பட்டு வீர மரணம் அடைந்த வீரர்கள் பற்றிய செய்திகளும் விரவிக் கிடக்கின்றன. போரில் விழுப்புண் பட்டு களச்சாவடைந்த அடைந்த மகனின் உடலைக் கண்டு பெருமிதமெடைந்த தாயாரின் மறக்குணம் , மூவேந்தர்களின் ஆட்சி சிறப்புகள் , குறுநில மன்னர்களின் ஈகை , ஒப்புரவு முதலான பண்புகளும் இந்நூலுள் இடம்பெற்றிருக்கின்றன.
இப்படிப்பட்ட அரிய பொக்கிஷமான புறநானூற்றுப்பாடல் ஒன்றுதான் நாம் இப்போது பார்க்கப்போகும் பாடல்…
கொரோனாவின் பிடியில் சிக்கி உலகே தத்தனித்துக் கொண்டிருக்கிறது. ரஜினி ஒரு படத்துல “ எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்“ னு பேசுவார்.. அதுபோல இந்தக் கொரோனாவும் எங்க இருந்து வருது.. எப்படி வருதுன்னு தெரியாம இன்றைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போகிறார்கள். அனைத்து மக்களும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். உலகம் முழுவதும் யாரையும் விட்டுவைக்கவில்லை… கொரோனா சென்ற பிறகு இங்கு பல தலைகீழ் மாற்றங்கள் நிகழும்..
எங்கள் தமிழ்க்கருவூலமான புறநானூறு (பாடல் 189)  வாழ்வின் அரிய தத்துவத்தை மிக எளிமையாக எடுத்துச் சொல்கிறது. வாருங்கள் அந்த தத்துவத்தைப் பார்ப்போம்..
“தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண் குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்;
நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்;
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;             
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே;
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினேதப்புந பலவே.
                                                            (புறம் – 189, நக்கீரர்)

ஒருவன் தெளிந்த கடல் சூழ்ந்திருக்கும் உலகம் அனைத்தையும் பிறருக்கு உரிமை இல்லாமல் தனக்கே உரியதாய் தன் வெண்கொற்றக் குடைக்கீழ்க் கொண்டுவந்து ஆண்டு ஆனுபவித்துக் கொண்டிருக்கிறான். மற்றொருவன் பகல் இரவு என்று பாராமல் நள்ளிரவிலும் உணவுக்கு வேட்டையாட விலங்கினைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். என்று வைத்துக்கொள்வோம். யாராய் இருந்தால் என்ன? அவன் உண்பது ஒரு படி உணவு. உடுத்திருப்பவை மேலாடை> கீழாடை என்று இரண்டே துணி. பிறவற்றை எண்ணிப் பார்த்தாலும் இருவர் நுகர்வும் ஒன்றாகவே உள்ளது. அப்படி இருக்கும்போது செலவத்தைச் சேர்த்துவைத்து என்ன செய்யப் போகிறோம். துய்க்கலாம் என்றால் மிஞ்சித் தப்பிவிடுமே. அதனால் செல்வத்துப் பயன் ஈதல் ஒன்றே.
                                                      (ed;wp- jkpo;j;Jsp)

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் வார்த்தை விளையாட்டைப் பார்ப்போமா?  அவரின் “சங்கத்தமிழ்“ நூலிலிருந்து

மந்த மருத தாலாட்டில் உறங்குதற்கு
மாட மாளிகை கட்டி வாழ்கின்ற பெரியீர்!

பணம் பணம் பணமென்று பாட்டாளியின் வியர்வையிலே
தினம் தினம் குளியல் நடத்திக் குவிக்கின்றீர் செல்வத்தை!
பிணம் தின்னும் கழுகு போல நீவீர்!
பெருக்க வைக்கின்றீர் உமது வயிற்றை!

இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஏழைகளைத் தள்ளிவிட்டு
பொருள்தேடி அலைகின்றீர்; போதுமென்ற மனமின்றி!

வாழ்வில் வளம் பெருக்கல் ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டோரே!
வார்த்தையொன்று கேட்கின்றேன் பதில் சொல்வீர்!

மாணிக்கப் பொறியலும் மரகதக் கூட்டுமா இலையிலிட்டு உண்கின்றீர்!
வைரத்தால் வறுவல் செய்து வைடூர்ய அவியலுடன்
முத்துப் பவளமெனும் மணிகளினால் செய்திட்ட அரிசியையா
குத்தி உலையிலிட்டுக் குடற்பையை நிரப்புகின்றீர்!

என்றதொரு கருத்தமைந்த கேள்வியினைக்
குன்றமெனச் செல்வம் குவிக்கின்ற மனிதரிடம்
மன்றமேறி அறிஞர் அண்ணா கேட்டார் – அதனை
மறவாமல் என்றும் நாம் கேட்கின்றோம்!

பொதுமை மணம் கமழவேண்டும் என்று
புவியில் நாம் முழங்குகின்றோம் இன்று
புதுமையல்ல இம்முழக்கம் புலவர் பிரான் நக்கீரர்
புறப்பாடலொன்றில் பொதுமை முரசம் ஆர்க்கின்றார் கேளீர்!

“தெண் கடல் சூழ் தரணி முழுவதுமே – தன்
வெண்கொற்றக் குடையின்கீழ் வரவேண்டுமெனத்
தனியுரிமை நிலைநாட்டத் துடிக்கின்ற வேந்தனுக்கும்
கனி சுவைக்கக் கல் எறிந்து வீழ்த்துதுல் போல்
காடகத்தில் விலங்குகளை வேட்டையாட
கண்ணுறக்கிமின்றிப் பகலிரவு பாராமல் அலைகின்ற
கல்வியறிவற்ற முரட்டு மனிதனுக்கும்,
மானம் காத்திட அவர்தம் உடலுக்குக்
கீழும் மேலும் இரு உடைதான் வேண்டும்! – அவரை
மயக்கத்தில் ஆழ்த்தாமல் பசி நீக்கக்
கூழோ பொங்கலோ உண்டு களிக்க
ஆழிசூழ் இவ்வுலகில் அவரவர்க்கும் ஒரு
நாழித் தானியம் மட்டும் போதுமென்றோ?

இப்படி

உண்பது நாழி உடுப்பவை இரண்டேயெனும்
உண்மைதனை உணர்ந்த பின்னும்
வறுமையில் பலர் வாட வளமிகு செல்வப்
பெருமையில் சிலர் ஆடல் நீதிதானோ?

உலகில் பிறந்தோர் அனைவருக்கும்
உடல், உள்ளத் தேவையெல்லாம்
ஒன்றாக இருக்கும்போது – இதனை
நன்றாகச் சிந்திக்காமல்
வெள்ளம் போல் பொருள் எதற்கு ஒருவன் சேர்த்தல் வேண்டும்?
பள்ளம் போல் வாழ்வினிலே பலர் எதற்குச் சாதல் வேண்டும்?

தனக்கே எலாம் எனும் தனியுடைமை தகர்த்துத்
தரித்திரத்தை விரட்டுவதற்குத் தக்க வழி காண
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொதுமைக் கொள்கையினை
வகுத்தளித்து வையத்தில் இன்பம் காண்பதுதுான் வாழ்வெடுத்த பயனாகும்.
தொகுத்தளித்தார் இக்கருத்தை நக்கீரர். அதனைத்
தொடர்ந்தளித்து வருகின்றார் தொல்புவியில் நல்வேலாரெல்லாம்.

          என்ன ஓர் அருமையான புறநானூற்றுப்பாடல். இன்று உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் செத்து மடிகிறார்கள். இத்தாலியில் அதிகம்பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வீசியெறிந்த பணக்கட்டுகள் தான் சாலையில் கிடப்பதாய் ஊடகங்கள் செய்திகள் பளிச்சிடுகின்றன. சாலையில் கிடக்கும் பணத்தைப் பார்த்தபோது எனக்குள் விழித்துக்கொண்டதுதுான் இப்புறநானூற்றுப்பாடல்… படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

செல்வத்துப் பயன் ஈதல் ஒன்றே…. அனைவருக்கும் கொடுப்போம்.. முதலில் கைகொடுப்போம் அடுத்து உண்ண உணவு கொடுப்போம்.. உறங்க இடம் கொடுப்போம்.. அனைவருக்கும் இப்புவியில் ஆறடி நிலம் உண்டு என்பதை மறவோம்.. ஆறடி மட்டுமே போதுமானது என்பதையும் மறவோம்.

புறநானூறு குறித்து மேலும் விரிவாக அறிய…
கிளிக் செய்க.. http://www.tamilvu.org/library/l1280/html/l1280ind.htm

மு.பாலகிருஷ்ணன், எம்.ஏ.,பிஎட்., டி.டி.எட்.,
பட்டதாரி ஆசிரியர் ( தமிழ்)
எஸ்.எஸ்.என்.அரசு மேல்நிலைப்பள்ளி,
கொம்மடிக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம்.
அலைபேசி 8248340305  புலனம் 9698995853

No comments:

Post a Comment