Saturday, March 28, 2020

70ஆவது குடியரசு தினம்..

1929ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்காக போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காந்தியடிகளின் போராட்ட வடிவங்கள் நாளுக்குநாள் மாறிக்கொண்டு வந்தாலும் அஹிம்சை வழியிலிருந்து அணுஅளவும் திரும்பவில்லை. 1918 -1919 ஆம் ஆண்டு காலக்கட்டம்……. ஆம் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் பீகார் மாநிலத்தில் சம்பரான் என்னுமிடத்தில் நடைபெற்ற ஒரு போராட்ட வடிவம் தான் காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தை அகில உலகிற்கு அடையாளம் காட்டியது. ஆம் அன்றுதான் காந்தியடிகள் சத்தியாகிரகம் என்ற அஹிம்சைப் போராட்டத்தை ஆரம்பித்தநாள். உணவுப் பயிர்களை பயிரிட விடாமல் அவுரிச் செடியை மட்டும் பயிரிட வேண்டும் என்று தங்கள் சுயலாபத்திற்காக ஆங்கிலேயர்கள் பொதுமக்களை மிரட்டினர். அவுரி மருத்துவத்திற்கு ( பாம்புக்கடி, ஒவ்வாமை , தோல்நோய், ஊதா சாயம்) பயன்பட்டாலும் கூட வயிற்றுக்கு உணவில்லாமல் எப்படி இச்செடிகளை பயிரிடுவது என்று விவசாயிகள் கோவப்பட்டாலும் ஆங்கிலேயளர்களுக்கு பயந்து அவுரிச் செடிகளை பயிரிட்டுவந்தனர். முதலில் வரிகொடாமல் இருங்கள் என்றார். வரி கொடுக்கவில்லை மக்கள். காந்தியைச் சிறைப்படுத்தினர். அவரும் போராட்டத்தை விடவில்லை. இறுதியில் உடன்பாட்டுக்கு வந்தனர் ஆங்கிலேயர்கள். இப்படி நூறு ஆண்டுகளுக்கு முன்னர் காந்தி ஆரம்பித்த போராட்ட வடிவம்தான் அஹிம்சை.. தொடரந்து ரௌலட் சட்ட எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், உப்புச்சத்தியாகிரகம் இப்படி பலே போ(பா)ராட்ட வடிவங்களில் ஆங்கிலேயரை எதிர்த்து விடுதலைக்காக போராடினார். அந்தக் காலக்கட்டத்தில் தான் 1929ஆம் ஆண்டு லாகூர் மாநாட்டில் முடிவெடுத்து 1930 ஜனவரி 26 அன்று பூரண சுயராச்சியமே விடுதலை என்று அனைவரையும் அந்த நாளை சுதந்திர நாளாகக் கொண்டாடும்படி வலியுறுத்தினார்.
               பின்னர் நடைபெற்ற பல போராட்டங்களுக்குப் பிறகு 1947ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியது ஆங்கிலேய அரசு. ஆனால் டொமினியன் அந்தஸ்து மட்டுமே வழங்கியது அதாவது நாம் விடுதலை அடைந்து விட்டோம் ஆனால் சட்டம் அவர்கள் இயற்றியது.. தலைமை பீடத்தில் அவர்கள் இருந்து வழிநடத்துவார்கள். நமக்கென்று சட்டம் உருவாகும் வரை.. இதுதான் டொமினியன் அந்தஸ்து.. அதாவது “மாப்பிள்ளை அவர்தான் அவர் போட்டிருக்கிற சட்டை என்னுதுன்னு செந்தில் காமெடி மாதிரி“ நீங்கள் சுதந்திரம் அடைந்து விட்டீர்கள்.. ஆனால் நாங்கள் சொல்வதுதான் சட்டம் என்ற நிலைதான் டொமினியன் அந்தஸ்து…… ……அதன் பின்னர்தான் ஆபிரகாம் லிங்கன் கூறியது போல “மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சி மக்காளட்சி“ அப்படி ஆட்சியை இந்தியாவில் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு டாக்டர் பி.ஆர் அம்பேத்கார் தலைமையில் சட்டவரைவுக்குழு எற்படுத்தி நமக்கென்று சட்டம் இயற்றத் தொடங்கினோம். சட்டவரைவுக் குழுக்களில் இடம்பெற்றோர் எல்லாம் ஏதோ காரணங்கள் சொல்லி விலகியபோதும் தனி ஆளாக, உலகின் அத்தனை நாட்டுச் சட்டங்களையும் படித்து அவற்றிலிருந்து நமக்கென்று ஒரு சட்டத்தை இயற்றி அச்சட்ட முன்வடிவை 1949 ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரை யாற்றினார், அண்ணல் அம்பேத்கர். (அவ்வுரையை இன்னொரு சந்தர்ப்பத்தில் காணலாம்.) அதன்பிறகு அச்சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்திய அரசியலமைப்புச்சட்டம் 1950 ஜனவரி 26ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. கி.மு. கி.பி போல நம் இந்தியாவும் 1950க்கு முன் 1950க்குப் பின் என்ற வரலாற்றைக் கொண்டது. நேற்று வரை அந்நியரின் சட்டத்தில் வாழ்ந்த நாம் 1950 ஜனவரி 26 முதல் நாமே நமக்கென்று வகுத்த சட்டங்களின் மூலம் ஆட்சி நடத்திய நாள்தான் குடியரசு நாள்..
               சுதந்திரத் தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் நம்நாட்டின் நிகழ்ச்சிகள் உலகிற்கே உதாரணமாகத் திகழும் சுதந்திர தினத்தன்று மநிலங்களில் முதலமைச்சர் கொடியேற்றி உரையாற்றுவார். மத்தியில் பிரதமர் கொடியேற்றி உரையாற்றுவார்.. குடியரசு தினத்தில் மாநிலத்தில் கவர்னர்களும் மத்தியில் குடியரசுத்தலைவரும் மூவண்ணக் கொடியேற்றி உரையாற்றுவார்கள்.. மற்ற நாட்டிற்கெல்லாம் நாம் ஏற்றுவது மூன்று வண்ணங்களில் உள்ள கொடிகள் தான் என்று நினைப்பு வரும்.. ஆனால் நாம்தான் ஒவ்வொரு வண்ணத்திலும் நம் நாட்டின் பசுமைக்கும் பண்பாட்டிற்கும் (பச்சை) சத்தியத்திற்கும் சமாதானத்திற்கும்  ( வெள்ளை) தியாகத்திற்கும் தீரத்திற்கும் (ஆரஞ்சு) என வண்ணங்களில் நம் நாட்டின் பெருமையைப் பேசுகிறோம். நடுவில் உள்ள சக்கரம் அறத்தை வலியுறுத்துகிறது..
கொடியைப் பற்றி நம் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் “ குங்குமச்சிவப்பு நிறம் ஆதாயம் கருதாத துறவையும், வெண்மை நிறம் ஒளியாக நம்மை வழி நடத்தவும், பச்சை மண்ணுக்கும் நமக்கும் உள்ள உறவை எடுத்துக்காட்டாகவும், அசோகச்சக்கரம் தர்மச் சட்டத்தின் வடிவமாகவும்” இருப்பதாக கூறியுள்ளார். இப்படிப்பட்ட இந்தக் குடியரசு நாளைக் கொண்டாடுவதில் பெருமைப்படுவோம்.. பெருமிதம் கொள்வோம்..
என் ஆசிரியர் எனக்கு கூறிய ஒரு நிகழ்வு மட்டும் இறுதியாக.. நாங்கள் சிறுவர்களாக படித்துக் கொண்டிருந்தபோது தேசியக்கொடியை தலைகீழாக குத்திக் கொள்வோம் ஆசிரியர் அதைச சரிசெய்வார். அப்போது ஒருநாள் தேசியக்கொடி யேற்றிச் சொல்லியது இன்றும் நினைவில் நிற்கிறது.. கொடியை சரியாக சட்டைகளில் குத்திக்கொள்ள நாம் வாழையில் சாப்பிடும் சாப்பாட்டை நினைவில் கொள்ளுங்கள் என்றார். வாழைஇலை (பச்சை கீழே) அதன் மீது சோறு ( வெள்ளை நடுவில்) சோற்றின் மீது காரக் குழம்பு அல்லது மீன் குழம்பு அல்லது  மசாலாக்குழம்பு ( ஆரஞ்சு மேலே) நினைவில் கொள்ளுங்கள்.. இனி மறப்பீர்களா என்று?
எப்படி மறப்போம் சத்தியத்தை மறந்தாலும் சாப்பாட்டை மறப்பாமோ ? சாப்பாடு முக்கியமா? சங்கம் முக்கியமா? சாப்பாடு தான… ஆனால் சாப்பாடும் முக்கியம் சங்கமும் முக்கியம் சத்தியமும் அதை விட முக்கியம்…… நன்றி மீண்டும் ஒரு முறை  குடியரசு தின வாழ்த்துக்கள்.
மகிழ்நன்( மு.பாலகிருஷ்ணன், ஆசிரியர்)
watsapp 96 98 99 58 53 voice call 824 834 03 05


No comments:

Post a Comment