Tuesday, March 31, 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – ரத்து செய்யலாமா? என்ன செய்யலாம்?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – ரத்து செய்யலாமா? என்ன செய்யலாம்?
என்னுடைய தனிப்பட்ட கருத்து..
1.      காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை எடுத்துக்கொண்டு பொதுத்தேர்வை ரத்து செய்துவிடலாம் என்று தயவுசெய்து நினைக்காதீர்கள். அத்தேர்வுகளின்போது மாணவர்களின் மனநிலையும், திருத்திய ஆசிரியர்களின் மனநிலையும் கண்டிப்பாக வேறுநிலையில் இருந்திருக்கும். அவர்களுக்கு மதிப்பெண்களை குறைத்தே வழங்கி பொதுத்தேர்வில் அதிகமாக கிடைக்கும் என்று ஆற்றுதல் நடந்திருக்கும். சிலபேர் தோல்வி அடைந்திருப்பார்கள்.  பார்டரில் உள்ள மாணவர்களை அப்படியே வைத்திருப்போம்.. அப்போதுதான் அடுத்த தேர்வில் படிப்பார்கள் என்று. எனவே தயவு செய்து காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
2.      கொரோனா பாதிப்பு முடிந்து மீண்டும் பள்ளி திறந்து ஏப்ரல் 15க்கு பின்னர் தேர்வு என்பதும் மாணவர் நலன்சார்ந்து கடினமானதாகும். 20 நாட்களுக்கு பின்னர் அவர்களை அழைத்து தேர்வுக்கு தயார் செய்வது என்பது குறுகிய கால இடைவெளி போல்… ஆதலால் ஏப்ரலில் தேர்வு என்பதும் வேண்டாம் ப்ளீஸ்
3.      சரி மாவட்ட அளவில் வினாத்தாள் எடுத்து அதை ஒரு தேர்வாக வைத்து அந்த மதிப்பெண்களைப் போடலாமா? தயவு செய்து வேண்டாம்.. பொதுத்தன்மை இல்லாமல் போய்விடும். இந்த மாவட்ட மாணவர்கள் மீண்டும் அதே பள்ளியில் படிப்பார்கள் என்பது 100சதவீதம் வாய்ப்பல்ல.. நிறைய பேர் தொழிற்கல்வி போகலாம்.. வேறு மாவட்ட பள்ளிகளுக்கு போகலாம். ஆகவே அந்த பொதுத்தன்மை போய்விடும்.
4.      தேர்வையே ரத்து செய்துவிட்டால்…….. இதுவும் பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.. எப்படி பதினொன்றாம் வகுப்பில் சேர்ப்பது. எந்த பிரிவில் சேர்ப்பது. தொழில்நுட்ப கல்விகளில் எப்படி சேர்ப்பது… முந்தைய தேர்வு மதிப்பெண்களை வைத்தா? தயவு செய்து வேண்டவே வேண்டாம்.
5.      அப்ப என்னதான் செய்யலாம். ஒரு வேளை இனி பள்ளி திறப்பு ஜுன் மாதம் எனில் ஜுன் மாதம் முழுவதும் கால அவகாசம் தந்து ஜுலை முதல் வாரத்தில் தேர்வு ஆரம்பித்து ஜுலை 15க்கு மேல் விடைத்தாள் திருத்தி செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்வு முடிவு வந்து அவர்களை காலாண்டுக்கு பின்னர் பதினொன்றாம் வகுப்பிலோ அல்லது தொழிற்கல்வி.. ஐடி.ஐ. படிப்புகளிலோ சேர்க்கலாம். அடுத்த வருடங்களுக்கான பாடத்திட்டத்தை கொஞசம் குறைத்து வைத்துக்கொள்ளலாம்.. உதாரணமாக பதினொன்றாம் வகுப்பு தமிழ்ப்பாடம் என்றால் 6 இயல் மட்டும் என்ற அளவில்…
6.      வரும் வருடங்களில் மேல்நிலை வகுப்பு போன்றே 10மதிப்பெண்கள் வருகை, ஒழுக்கம், ஒப்படைப்பு போன்றவற்றிற்காக இடைநிலை வகுப்புகளுக்கும் தாருங்கள்…..
7.      அனைத்து தேர்வுகளையும் இடைத்தேர்வு, திருப்புதல் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் அடிப்படையில் இருக்கட்டும்.
8.      வரும் வருடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழக மாதிரி வினாத்தாள்கள் விடைக்குறிப்புடன் வழங்கினால் இன்னும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். அதேபோல் ஒவ்வொரு மாணவருக்கும் அம்மாதிரி விளனாத்தாள் புத்தகம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
9.      கருத்தரங்கங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு பாடத்திட்ட பாடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.. ஆனால் அவையெல்லாம் தேர்வை எதிர்பார்த்தும் மதிப்பெண்களை நோக்கியுமே நடத்தப்படுகின்றன… படிக்கப்படுகின்றன.. வேதனையாக இருக்கிறது. கருத்தரங்கங்கள் மாவட்ட அளவில் நடத்துவதற்கும் பரிசளிப்பதற்கும் ஏதேனும் செய்தால் நன்றாக இருக்கும்.. மதிப்பெண்ணை நோக்கி ஓடுவது குறைந்து இயல்பாக எழுதும் நிலை வரும்.
10.  தேர்வை எழுதுவதற்கு மூன்று மணிநேரம் என்பதை மீண்டும் பரிசோதனை செய்து பார்க்கலாம்.. எழுதுவதற்கு நிறைய இருக்கிறது. அதற்காக மூன்று மணி நேரம் அந்த பிஞ்சு கைகளை தொடர்ந்து எழுதப் பழக்கப்படுத்துவது சரியல்ல என்றே படுகிறது. மேலும் தேர்வறையில் ஆசிரியர்களுக்கு உட்கார நாற்காலி என்பதையும் மறுபரீசலனை செய்ய வேண்டும். கிட்டத்தட்ட தேர்வு நாட்களில் தொடர்ந்து தேர்வு நடைமுறைகள் என் சுமார் நான்கு மணி நேரம் நிற்க வேண்டிய சூழல் உண்டாகிறது.. அதையும் கவனத்தில் கொண்டால் நலம். 20 மாணவர்கள் அமரக்கூடிய தேர்வறையில் ஆசிரியர்கள் அமர்ந்தால் பார்த்து எழுதிவிடுவார்கள் என்பது மாணவர்கள் பார்த்து எழுதட்டும் என்று நினைத்துவிட்டால் வாசிலிலேயே நின்று கொண்டு அதைச் செய்துவிட முடியும். ஆனால் ஒரு நல்லாசிரியர் அப்படி செய்வதில்லை. ஆகவே தேர்வறையில் நாற்காலி என்பதையும் மறுபரீசலனை செய்ய வேண்டுமாய் பணிவுடன் வேண்டி விரும்பி ஆகட்டுக் கொள்கிறேன்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த ஆலோசனைகள் என்னுடைய தனிப்பட்ட கருத்துகள் தான். ஏதேனும் குறைகள் விமர்சனங்கள் என்றால் கமெண்ட்ஸ் வரவேற்கப்படுகின்றன… பேசலாம்….
bala 1மு.பாலகிருஷ்ணன், எம்.ஏ.,பிஎட்., டி.டி.எட்.,
பட்டதாரி ஆசிரியர் ( தமிழ்)
எஸ்.எஸ்.என்.அரசு மேல்நிலைப்பள்ளி,
கொம்மடிக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம்.
அலைபேசி 8248340305  புலனம் 9698995853

No comments:

Post a Comment