ஒரு பத்து ரூபாய் பதிவுபோட்டிருந்தேனே அதன் தொடர்ச்சிதான்…. இந்த பதிவு….
கருப்புச்சட்டை கடவுளைத் தேடி அலைந்தேனே.. அந்த கடவுளின் தூதர்களுக்கு ஒருநாள் காலை உணவு அளிக்கலாம் என்று முந்தையநாள் சந்தையில் காய்கறிகள் உள்ளிட்ட சாமான்கள் வாங்கி சேர்த்தாயிற்று…
பாசமிகு அண்ணன் செல்வன் நடுக்காலன்குடியிருப்பு பாத்திரம் செல்வம் அவர்களிடம் அவர் வீட்டிலிருந்த ஒரு கேஸ் அடுப்பையும் வாங்கி வீட்டில் வைத்தாயிற்று….. காலை 4மணிக்கு ஆரம்பிக்கலாம் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு தூங்கிவிட்டேன்…
தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று சொல்லக் கேள்விபட்டிருப்போம்.. இது அந்தவகையறா அல்ல… தனக்கு இருப்பதையே தானம் செய்வது…
தனக்கு மிஞ்சி தானம் செய்வதற்கு ரத்தன் டாடா அல்ல…
கஞ்சிக்கு கூட வழி இல்லாதவர்களுக்கு இருப்பதை வைத்து உதவி செய்ய நினைக்கும் ஏழைகளின் பித்தன்….
ஒருவேளை ரத்தன் டாடா வந்து…. நீங்கள் நன்றாக உதவி செய்கிறீர்களே… இதோ வைத்துக்கொள்ளுங்கள்… என்று நிரப்பபடாத செக்கைத் தந்து எவ்வளவு வேண்டுமோ நிரப்பிக் கொள்ளுங்கள் என்று கூறினால்…. இது நடக்காது ஒருவேளை நடந்தால்… அந்தச் செக்கில் பணம் நிரப்பும் இடத்தில் நான் நிரப்பும் தொகை……………………………“மனிதம்” அப்படித்தான் நான்….
மறுநாள் வழக்கம்போல் 4 மணிக்கு முழித்து அம்மாவை எழுப்பி வேலையை ஆரம்பிக்கலாம் என்று ஹாலுக்கு வருகிறேன்… அங்கே அம்மா காய்கறிகள் வெட்டிக் கொண்டிருக்கிறார்..
வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. உதவி செய்வதற்காக அம்மாவின் தோழி ஜெயாவும் வந்தாயிற்று,.. வேலை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது… மணி ஏழு… நண்பர்கள் வந்துவிட்டார்கள். இட்லியை எடுத்து ஆட்டோவில் வைத்து கிளம்பியாயிற்று….
இப்போது எம் நண்பர்களைப் பற்றி சொல்ல வேண்டும். நிறையபேர் இப்படி தினமும் செய்து கொண்டிருக்கிறார்கள். கலீல்ரகுமான்..சுந்தர்… இரத்தினவேல்முருகன்…….
கலீல்ரகுமான்…. நாம் வேலைகளுக்கு இடையில் எப்பவாவது இப்படி உதவி செய்வோம்… ஆனால் இவர் இதையே வேலையாகச் செய்து கொண்டு அப்ப அப்ப வேலை செய்வார். ப்ரண்டஸ் ஆப்போலீசில் இருக்கும் அருமை நண்பர்.. திருவிழா காலங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் இடத்தில் இவரைக் காணலாம்… மற்ற நாட்களில் ஏதேனும் உதவி என்று அழைத்தால் அடுத்த நிமிடம் உங்கள் அருகில் இருப்பார்.
சுந்தர்.
இவர் மருத்துவர்.. என்னுடைய பள்ளிகாலத்து நண்பர்.. அப்பவே ஆங்கில வழியில் படித்த படிப்புக்காரர். இப்போது ஜெய்கபீஷா என்று இயற்கை வழியில் மருத்துவம் செய்து மக்களுக்கும் உதவி செய்து வருகிறார்… இவரின் முகநூல் பார்த்தால் பெரிய பெரிய மருத்துவ விளக்கற்களுக்கு எளிமையான சொற்களில் பாமரமக்களுக்கும் புரியும் வகைளில் பேசிய காணொலிகளைக் காணலாம்..
மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை உரை நிகழ்த்தி தேர்வு பயம் அகற்றுபவர்.
இரத்தினவேல் முருகன்.
பள்ளிகாலத்து நண்பர். நேரமேலாண்மையைக் கடைபிடிப்பதில் கடிகாரத்திடமே போட்டியிடும் நண்பர்.
மூவரும் தற்போது நண்பர்களிடம் எதவி பெற்று உடன்குடியைச்சுற்றியுள்ள பகுதிகளில் ஆதரவற்ற முதியோர்களுக்கு மூன்று வேளையும் உணவு தருகிறார்கள்.. இன்று நான் இணைந்தேன்.
அம்மா தயார் செய்த இட்லியுடன் சென்றோம். செல்லும் ஒவ்வொரு இடமும் ஒரு வரலாற்றை இயம்பியது… செல்லும் இடத்தில் உள்ள முதியவர்கள் இந்த ஆட்டோ சத்தம் கேட்டதும் எழுந்து கைகழுவ தயாராகிறார்கள். கைகளைக் கழுவியவுடன் தட்டில் இட்லி சாம்பார் சட்னியுடன் ஒரு தண்ணீர் பாட்டில் கொடுத்துவிட்டு அடுத்த முதியவரைநோக்கி பயணம் தொடர்கிறது.
“ ரஜினி பாட்ஷா படத்தில் பாடுவாரே.. கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க… நீங்க தை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க…“ என்பதுபோல இந்த ஆட்டோ பசியிலிருப்பவர்களைக் கண்டால் தானாக நிற்கிறது.. அவர்களுக்கு உணவளிக்கிறது… எங்கள் பங்கும் சேர்ந்திருப்பதில் எங்களுக்கு ஈடில்லா மகிழ்ச்சி.
இன்னொரு தாத்தாவிடம் சென்றோம். தாத்தாவுக்கு இட்லி கொடுத்துவிட்டு திரும்புகையில் தாத்தா நாளைக்கும் இதே இடத்துல இருப்பீங்களா? வேற எங்கயாவது இருப்பீங்களா? என்று கேட்கிறோம்… இதே இடத்தில் இருக்கிறேன் என்று சொன்னவர்.. என்னைப் பார்த்து மருமகனே இங்கயே இருக்கிறேன் என்று சொல்லியபோது என் கண்களில் கண்ணீர் திரண்டது. நான் நினைத்துக் கொண்டேன்.. தாத்தா நீங்கள் பெற்றிருந்தால் சில மகன்கள் இருந்திருக்கலாம்.. ஆனால் இப்போது உங்களுக்கு பல மகன்கள் இருக்கிறோம்.. கவலையே படாதீர்கள் என்று நினைத்துகொண்டு அடுத்த இடம் நோக்கிச் சென்றோம்…. ஆட்டோவில் செல்லும்போது நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன… நாம் என்றாவது பட்டினியாய் இருந்திருக்கிறோமா? என்று நினைவிலே இல்லை.. பட்டினி கிடக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் பசி அறிவேன்.
பண்டாரஞ்செட்டிவிளை பெண்கள் பள்ளியின் முன்னால் உள்ள பேருந்து நிலையத்தில் ஒரு தாத்தா நாங்கள் சென்றதும் பசியில் இருந்திருப்பார் போல.. உடனே சாப்பிட தயாராகி விட்டார்.. அவருக்கு கொடுத்துவிட்டு செல்கையில் அவரின் கதையைக் கேட்டேன். எதிரில் உள்ள தெருவில் அவரது வளர்ப்பு மகளின் வீடு.. ஆனால் இவருக்கு அங்கு இடமில்லை. விரட்டி விட்டார்கள்.. பல சொத்துகளுக்கு அதிபதி. ஆனால் இன்று சாப்பாடு இல்லாமல் பேருந்துநிலையத்தில் இருக்கிறார்.. கண்களில் கண்ணீரோடு செல்கிறேன். அடுத்து ஒரு பாட்டி… நடக்கவும் நிற்கவும் முடியவில்லை.. அவரிடம் உள்ள பாத்திரத்தில் இட்லியையும் சட்னியையும் கொடுத்துவிட்டு திரும்புகிறேன்…
இதுவரையில் கண்களில் திரண்டிருந்த கண்ணீர் வழிய ஆரம்பிக்கிறது. ஆட்டோ நின்றவுடன் நான் பார்க்கிறேன்.. யாரும் இல்லை… என்ன நண்பா யாருமே இல்லையே… என்கிறேன். அதோ பார் நண்பா.. அந்த சுவற்றில் உள்ள பாத்திரத்தை எடுத்துவா என்கிறான்.. நான் அந்தச் சுவற்றில் பார்க்கிறேன். அதில் ஒரு சிறிய தூக்குச்சட்டியும், ஒரு தட்டும் இருக்கிறது. அதைப் பார்த்த உடன்தான் கண்ணீர் கசிய ஆரம்பித்தது. அவ்ளோ பேரைப் பார்த்து இட்லி கொடுக்கும் போது இல்லாத துக்கம் இந்த சுவற்றைப் பார்த்ததும் வந்தது..
வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் உருவமில்லா ஒரு உருண்டை உருண்டது. துக்கம் தொண்டையை அடைக்கிறது. அடுத்த தாத்தாவை நோக்கி நகர்கிறோம்.. அங்கே ஒரு குடும்பமே காத்திருக்கிறது. நடக்க முடியாத தாத்தா, பாட்டி, ஒரு மகள் அவர்களுக்கு தேவையான அளவு இட்லி, சட்னி சாம்பார் கொடுத்துவிட்டு ஆட்டோ தேரியூர் நோக்கி போகிறது. அங்கு ஒரு மனநலம் பாதித்த அண்ணன் காட்டுப்பகுதியிலிருந்து ஆட்டோவைப் பார்த்து வருகிறார். அவரின் கைகள் கழுவுவதற்கு தானாக நீள்கிறது… மணிச்சத்தம் கேட்டவுடன் உமிழ்நீர் சுரக்குமே பாவ்லவ் சோதனையில் அதேபோல்…. அவருக்கும் இட்லி கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தோம்…
உண்மையில் இன்று வாழ்வில் மகிழ்வான நாள். பசியிலிருப்பவர்களுக்கு உணவு வழங்குவது சரி.. ஆனால் மனநலம் பாதித்த அந்த அண்ணன், விரட்டிவிடப்பட்ட அந்த தாத்தா…. பார்க்க ஆள் இல்லாத தாத்தாக்கள்.. மருகமனே என்றழைத்த தாத்தா…. இப்படி இதைப்போல் இன்னும் எத்தனைபேர் இருப்பார்கள்.. அவர்களுக்க எல்லாம் யார் உணவு தருகிறார்கள்… கண்டிப்பாக யாரோ தருவார்கள்….
இதில் என்ன தெரியுமா? முதல்நாள் பார்த்த கருப்புச்சட்டை கடவுளை இன்று நான் பார்க்கவே இல்லை…. எங்களை இன்று உணவளிக்கச் செய்த அந்த கருப்புச்சட்டை கடவுளைக் காணவில்லை… கடவுளுக்கு ஆயிரம் வேலை இருக்கும்… ஆனால் அந்தக் கருப்புச்சட்டை கடவுளின் முகத்தை அத்தனை பேரிலும் பார்த்தேன்….. கடவுள் இருக்கார்… இதோ அவர்களைத்தான் சந்தித்துவிட்டு பசியாற்றிவிட்டு சென்று கொண்டிருக்கிறேன்.
உங்கள் பகுதியிலும் இப்படி சிலபேர் இருக்கலாம்.. அவர்களுக்கு ஏதோ உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்……
தலைமை தபால் நிலையத்தில் சேர்க்கும் தபால் உரிய நேரத்தில் உரியவரை உடனே சென்றடைவது போல்… நீங்கள் செய்யும் உதவி உடனு சென்றடையும்… எங்கே சென்றடையும்? அதையும் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?...
வாருங்கள் கரோனாவை விரட்டுவோம்…
அதற்கு முன் பசியை விரட்டுவோம்.......
ஆதம் திருப்தியோடு வீட்டுக்குள் நுழைந்தேன்… அம்மாவிடம் இன்னிக்கு நடந்ததைச் சொன்னேன்… புகைப்படங்களைக் காண்பித்தேன்.. வேலை இன்னிக்கு அதிகமாயிற்று என்னம்மா என்றேன்…
அதற்கு அம்மா……. நீ டெய்லி வாங்கித்தா!.... நான் செஞ்சித்தாரேன்…… சொன்னது அம்மா அல்ல!... அன்பு!.... நான் பார்த்த முதல் கடவுள்….
No comments:
Post a Comment