Thursday, April 9, 2020

வாசித்தல் திறன்...படித்தல் திறன்.... குழந்தை உளவியல்...

வாசித்தல் திறன்...படித்தல் திறன்.... குழந்தை உளவியல்...
கீழே காணும் செய்தி இன்றைய தந்தியில் முகப்புபக்க செய்தி..
தினத்தந்தி பாமரனையும் படிக்க வைத்த
நாளிதழ் என்பது நாடறிந்த செய்தி..
ஆனால் நானறிந்த செய்தி தெரியுமா?
அறிந்த செய்தி சொல்லட்டுமா? வாங்களேன்...
உங்கள் கண்களையும் காதுகளையும் கடன் தாருங்கள்.. அப்படியே கொஞ்சம் டேடாவையும் .....
வழக்கம்போல்தான் இன்றும் விடிந்தது... மணி 4. எப்பவும் இந்த 4 மணிக்கு கோழி கூவுவதுபோல் சரியாக எந்திரிக்க பழகிக் கொண்டேன்..
அப்படியே காலைக்கடமைகளை முடித்துவிட்டு வாட்சப்பில் வலம் வந்து முகநூலில் முகம் பதித்து தேர்தல் நேர வாக்குறுதிகள் போல LIKES ஐயும், comments ஐயும் தாராளமாக வழங்கிவிட்டு 6மணிக்காக காத்துக்கிடந்தேன்…
144 அல்லவா? அதுவும் இல்லாமல் 6 மணிக்கு தான் அந்த நாளிதழ்களைப் பிரித்து வழங்கும் சரியான நேரம்…
அதிகாலை ஆள் அரவமற்ற சாலை… யாரும் தூக்கத்தைவிட்டு வெளியில் வரவில்லை… வந்து மட்டும் என்ன ஆகபோகிறது? என்று எண்ணியிருக்கலாம்?
நாளிதழ்களை வாங்கி வந்து படித்துமுடித்து எட்டிப் பார்த்தால் மகிழ்வதனா எழுந்து விட்டாள்… மகிழ்வதனா (மகள்) காலைக்கடமைகளை முடித்துவிட்டு என்னிடம் வந்தாள்.. எப்பா என்னப்பா செய்ற? காலையிலே போன எடுத்திட்டியா? “யம்மா அப்பா போன் பாக்கு காலையிலேயே!“ என்ற ஒரு புகாரைத் தட்டிவிட…
நான் மகி இந்த பேப்பரில் உள்ளத வாசிச்சுக் காமி பாக்கலாம் என்ற ஒரு சிறிய சவாலை முன்வைத்தேன்..
தலைப்புச் செய்தியை வாசித்தாள்….
அடுத்த தலைப்புச் செய்தியை அவளாகவே வாசித்தாள்.. (உளவியல்)
அடுத்து இதை வாசி என்று இன்னொரு தலைப்புச் செய்தியைக் கொடுத்தேன்.. (அதுதான் கீழே உள்ள படம்)
வாசித்தாள்.. முடிந்தது… இதற்குள் அம்மாவிடம் அழைப்பு.. காபி குடிக்க.. பின்பக்கம் போய் ஸ்கிப்பிங் முதலில் 4, 3, 2, 1, 17, 23, 48 என 50க்கும் மேல் நான் குதிக்க அவள் எண்ண….. முடித்து காபி குடிக்க அமர்ந்து விட்டோம்..
இப்போதுதான் முக்கிய கட்டம். அவள் அருகில் அமர்ந்ததும் ஏற்கனவே வாசித்தாலே அதை நினைவுபடுத்த முதலில் “ மகி இன்னிக்கு செமயா வாசிச்சா“ என்று அவள் அம்மாவிடம் ஒரு பாராட்டை அவள் முன்னாடியே வைத்தேன். நைசாக அவளின் முகத்தைப் பார்த்தேன் ஒரு புன் முறுவல் பூத்தது.. இப்போது தயாராகி விட்டாள்.. கற்றல் கற்பித்தலுக்கு என்பதை அந்த புன்முறுவல் புகைப்படம் படித்துக் காட்டியது.. உடனே நான் “மகி இன்னிக்கு பேப்பர்ல என்ன படிச்ச கொஞ்சம் சொல்லேன்“ என்றதும்.. சொன்னால்.. நான் அந்த மூன்று ஊர் பெயரை மட்டும் சொன்னால் போதும் என்றேன்..
முதலில் அவள் சொன்னது தென்காசி, இரண்டாவது தூத்துக்குடி ஆனால் மூன்றாவது நெல்லை அவளின் நினைவுக்கு வரவே இல்லை.. அவள் யோசித்து யோசித்து பார்க்கிறாள் வரவே இல்லை.. நான் முதலெழுத்து “நெ“ என்கிறேன். அப்போதும் அவளால் நினைவுக்கு கொண்டு வரவில்லை.. அடுத்து “ல்“ என்கிறேன்.. இப்போது அதிரடியாக “நெல்லை“ என்கிறாள். என்னுடைய கற்பித்தல் வெற்றிபெற்ற தருணம் இதுதான்… நெல்லை என்று சொன்ன போது….
சரி இதில் என்ன உளவியல் இருக்கிறது என்கிறீர்களா? ஆம் இருக்கிறது அதுதான் குழந்தை உளவியல்…
ஏன் அவள் முதலில் தென்காசி, என்றாள்… அவளின் பாசமிகு பெரியப்பா அதான் என் அண்ணன், குடும்பத்தோடு அங்கே இருக்கிறான்.. அங்கு சென்றிருக்கிறோம்.. தென்காசி சுந்தரபாண்டியபுரத்தில் வீடு.. அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அண்ணி கணினி பயிற்றுநர்.. நாங்கள் விடுமுறையின்போது அங்கே சென்று அங்குள்ள குளத்தில் குளித்து….. ஆதலால் அவளுக்கு தென்காசி மறக்கவில்லை..
அடுத்து எங்கள் மாவட்டம் தூத்துக்குடி அதுவும் மறக்கவில்லை.. அதிலும் பாருங்கள்.. சொந்த ஊரை முதலில் சொல்லவில்லை.. அவள் எந்த ஊரைப் பார்த்து சொக்கி மகிழ்ந்தாலோ அதை முதலில் சொல்கிறாள்…
ஆனால் கடைசிவரை நெல்லை வரவில்லை பார்த்தீர்களா? அதற்கும் அவளே விடை சொல்லிவிட்டாள்.. ஆமா தென்காசிக்கு போயிருக்கோம்.. பெரியப்பா வீட்டுக்கு.. நெல்லைக்கு நீ கூட்டிட்டே போகல… அதான் மறந்துட்டு… ஆக இந்த தொடர்பு படுத்துதல் என்பது குழந்தைகளிடம் இயல்பாக உள்ள திறன். அதைத் தூசுதட்டி எடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு.. அதைச் சரியாகச் செய்தால் எவ்வித கற்றலும் மறக்காது… கற்பித்தலும்.. கசக்காது.. கற்கண்டு போல கற்றலும் கற்பித்தலும் இனிக்கும்…
இப்போ அவளின் அம்மா” மகி நாம ஒரு நாள் பஸ்ல வரும்போது இன்னொரு பஸ் நம்ம பஸ்ல மோதி கண்ணாடி உடஞ்சி தம்பி மேல பட்டுச்சே.. அப்ப நாம எல்லாம் இறங்கி வேற பஸ்ல வந்தோம்ல அந்த ஊருதான் நெல்லை… னு சொல்ல.
எப்பா இப்ப அந்த மூணு ஊரையும் வாசிச்சத சொல்லட்டா?
நெல்லை… தென்காசி.. தூத்துக்குடி…
குழந்தை உளவியல்…. இருக்கட்டும்.. முதலில் செய்தி சொல்வதுபோல கொரோனாவை ஒழிப்போம்.. மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய தருணம்….
#144 #stayhome #gocorona

No comments:

Post a Comment