ஒரு பதிவுக்கு 2 ரூபாயாமே அப்படியா? அப்படி ஒரு செய்தி கேள்விபட்டேன்.... சரி அது இருக்கட்டும்....
இது பத்து ரூபாய் பதிவு ..........
பைக்கில் போய்க்கொண்டு இருந்தேன்... பல சிந்தனைகளோடு...
கடைகளெல்லாம் அடைத்துக் கிடந்தன.
சாலைகளில் பங்குனி வெயில் பல்லைக் காட்டியது...
முககவசம், கண்ணாடி அணிந்திருந்தேன்..
பரபரப்பாக இருக்கும் வேளை
ஓரிருவரைத் தவிர சாலையில் எவரும் இல்லை....
எப்போதும் சாலையில் வரும் மனநிலை சரியில்லாத அந்த அண்ணன் கருப்பு பேண்ட், சட்டை சகிதம் எதிரில் தூரமாக வந்துகொண்டிருந்தார்...
உடன்குடியில் பலபேர் பல தடவை பாத்திருப்போம்....
எப்பவும் கையில் ஒரு சாக்குப்பை வைத்திருப்பார்...
ஏதேனும் சொல்லிக்கொண்டே சாலையில் செல்வார்..
அவரேதான்... அவரேதான் தொலைவிலே கண்டு கொண்டேன்.....
இரண்டு பேர் அவரின்
எதிரில் எனக்கு முன்னால் நடந்து சொன்று கொண்டிருந்தார்கள்.. அவர்கள் அந்த அண்ணனிடம் வரும்போது அவர் கையை நீட்டி காசு கொடு என்றார்.
அவர்கள் கண்டுக்கவே இல்லை...
அடுத்து மிதிவண்டியில் செல்பவரை மறிப்பதுபோல் கை நீட்டி காசு கேட்டார்..
அவரும் கண்டு கொள்ளவே இல்லை...
இப்போது நான் அவர் அருகில் பைக்கில்.... நான் கையை நீட்டுவார்.. அதனால் பையைத் துழாவினேன். பணம், பர்ஷ் எல்லாம் அப்போதுதான் வீட்டில் வைத்துவிட்டு வந்திருந்தேன். அய்யோ வச்சிட்டு வந்துட்டோமே என்று கவலைப்பட்டுக் கொண்டே அவர் கையை நீட்டுவார் நாமும் இல்லை என்று சொல்லிவிட்டு சென்று விடுவோம் என்று தீர்மானித்து சென்று கொண்டிருந்தேன்...
அவரருகில் போயும் என்னைப் பார்த்து கையை நீட்டவே இல்லை... அவர் பாட்டுக்கு போய்க் கொண்டிருந்தார். எனக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது..
நடந்து சென்றவர்களிடம்,
சைக்கிளில் சென்றவரிடம் காசு கேட்டதைக் கண்ணால் பார்த்தேன். ஆனால் பைக்கில் சென்று கொண்டிருந்த என்னை அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை..
ஒருவேளை வேகமாக வருகிறார் என்று நினைத்திருப்பாரோ.....
நான் அவ்வளவு வேகமும் இல்லை.... மெதுவாதான் வந்தேன்.....
அவர் என்னைக் கடந்து சென்று விட்டார்..
நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்.. எனக்குள் என்னவோ செய்தது...
அவர் என்னிடம் ஏன் கேட்கவில்லை.... என்னிடம் பணம் இல்லை என்பதைக் கவனித்து விட்டாரோ? வாய்ப்பில்லை....
பைக்கில் வருபவர்கள் தரமாட்டார்கள் என்று எண்ணியிருப்பாரோ...
இல்லையெனில் முககவசம் கண்ணாடி அணிந்து சென்றதால் இவர்கள் எல்லாம் தரவே மாட்டார்கள் என்று எண்ணியிருப்பாரோ? பல சிந்தனை...
மனைவி என்னாச்சு ? என்றார்.. நான் இப்படி இப்படி என்றேன்...
சரி என்று பர்சைத் துழாவினேன். அதற்குள் மனைவியிடமிருந்து பத்து ரூபாய் உடனே கிடைத்தது.
வாங்கிக்கொண்டு மீண்டும் அதே சாலையில் வருகிறேன்.. அந்த அண்ணனைப் பார்த்த இடத்தில் அவரில்லை... அய்யோ என்று மனம் பதறியது... அவர் சென்ற சாலையில் மிக வேகமாக சென்று பார்க்கிறேன்.. எங்கும் இல்லை... பக்கத்தில் பிரிந்து சென்ற இன்னொரு சாலையில் சென்று பார்க்கிறேன். அங்கும் இல்லை.. அட அதற்குள் எங்கே சென்று விட்டார் என்று சோகமாக திரும்பிய வேளையில் ஒரு நீண்ட தெருவிற்குள் கருப்புச்சட்டை அணிந்து கையில் பையுடன் அந்த அண்ணன் செல்கிறார்... கூர்ந்து கவனித்தேன்...
அவர்தான்.. அவருதான்.. அவரேதான்.... வேகமாகச் சென்று அவரின் கையில் பத்துரூபாயைத் திணித்தேன் ... ஏற்கனவே இரண்டு சில்லறை நாணயங்கள் அவரிடம் இருந்தன... பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு அவரின் முகத்தைப் பார்க்கிறேன்...
ஆளைமயக்கும் அற்புத புன்னகை.... அதோடு விட்டாரா?
என்ன இன்னும் வீட்டுக்கு போகலாயா? என்று அதட்டும் குரலில்......
வீட்டுக்கு வந்துவிட்டேன் நான்... ஆனால் மனது அவரைப்போல் எத்தனைபேர் இப்படி கஷ்டப்படுகிறார்களோ... அவர்களுக்கு யார் சாப்பாடு தருவார்கள் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன்......
இதோ முடிவே பண்ணிட்டேன்... நண்பர்கள் சிலர் இவர்களுக்கு காலை உணவு தருகிறார்கள்.. அவர்களிடம் நாளை ஒருநாள் எங்கள் வீட்டில் தயார் செய்து அனைவருக்கும் தருகிறேன்... எவ்வளவு என்று கேட்டேன்.... 120 இட்லி தண்ணீர் பாட்டில்... சாம்பார் சட்ணி ஆகிறது... என்றான் நண்பன்..
நாளை வீட்டிலே தயார் செய்து சாம்பார் சட்னி, தண்ணீர் பாட்டில் எல்லாம் அவர்கள் இருக்கும் இடத்திலே தருகிறேன்.. நண்பா என்றேன்...
கொஞசம் மனப்பாரம் இறங்கியிருக்கிறது....
நாளை அவர்களுடன் இருப்பேன்...
இட்லியோடு..... வருகிறீர்களா? வாருங்கள்.
ஒரு வேளை உணவு அளிப்போம்.... கொரோனவினால் இன்று பலபேர் பட்டினியாய் இருக்கிறார்கள்....
அன்னச்சத்திரம் ஆயிரம் வைத்தல் இப்போது அவசியம்.... ஊரடங்கு முடிந்தவுடன் வேண்டுமானால்
“ஆங்கு ஓர் ஏழைக்கு அல்ல“ பல்லாயிரம் பேருக்கு எழுத்தறிவிப்போம்.....
பாசமுடன்
சகிபாலா ( பாலகிருஷ்ணன்)
No comments:
Post a Comment