Saturday, April 4, 2020

ஒரே நாளில் எழுதிய முகநூல் கவிதைகள்.....


ஒரே நாளில் எழுதிய முகநூல் கவிதைகள்.....

புத்தகம்


அகத்தைத் தூய்மையாக்கும்

அறிவுலகின் ஆயுதம்

நம்மைப் புதுப்பிக்கும்

புதிய பூபுத்தகம்

பெற்றோர்
கடவுளின் தூதர்களாக
மதத்தின் பெயரில் பலர் உலாவ
கடவுளாகவே வந்த தூதர்கள்.
வேறு எவராலும் நிரப்ப முடியாத
அன்பினால் நிரம்பிய அற்புதம்
அள்ள அள்ளக் குறையாத
அட்சய பாத்திரம்..
நேரம்
கட்டுக்கடங்கா காளை
திட்டமிடாவிட்டால்
இவன் வருவதும் போவதும்
அந்த காற்று கூட அறியாது
விட்டால் பிடிக்க முடியாத
விண்மீன்
காலம் பொன் போன்றது
நேரம் கண் போன்றது....

அடக்கம்
உள்ளங்கைக்குள்
உலகை 'அடக்கும்'
அறிவியல் உலகம்
கொரோனாவை அடக்க முடியாமல்
வீட்டுக்குள் அடங்கிக் கிடக்கிறது..
அடக்கம் அமரருள் உய்க்கும் .
அடக்கம் நிம்மதியான வாழ்வின் தொடக்கம்..
இல்லாவிட்டால் அனைவரும்
ஆறடி குழிக்குள் அடக்கம்....
மகள்
தாய்மையின் தவம்.
வாழ்க்கை என்னும்
கோடிட்ட இடத்தை நிரப்பும் உயிரெழுத்து.
உயிரினங்களிடம் அன்பு செலுத்த
கடவுள் அனுப்பிய தேவதை.
ஆண் பிள்ளையோ
வாழும் வரை
பெண் பிள்ளையோ
வாழ்வின் நிறை...
ஆசை
புத்தனுக்கும் பிடித்த
இரண்டெழுத்து இம்சை..
இந்த 'சை' வந்து ஒட்டிக்கொண்டால்
அலாவூதீனின் அற்புத விளக்கு கிடைத்தாலும்
அடுத்த விளக்கு எங்கே என்று தேட வைக்கும் ....
ஆசையை விட்டால்
அனைத்தையும் அடையலாம்..
நண்பன் 'ஆசையைப் பிடித்துக் கொண்டால்
அகிலத்தையும் அளக்கலாம்....
கொரோனா
தடுப்பூசிக்கு
காய்ச்சல்
அறிவியல் உலகின்
ஆபத்து..
தூய்மை இந்தியாவின்
தூதுவன்….
சுற்றுச்சூழலின் நண்பன்…..
தனித்து இரு.. தவிர்த்திடு
அற்புதம்
இறைவனின் படைப்பில்
எல்லாமே அற்புதம்
கோடையிலும்
கொட்டித்தீர்க்கும் மழை
அக்னி நட்சத்திர வெயில்
ஆகாய சூரியன்
தென்றல் காற்று
தித்திக்கும் தேன்..
சாரல் மழை..
குழந்தை என இவ்வுலகின்
அத்தனையும் அற்புதம்
விளக்கு
ஆதிமனிதன் கண்டுபிடித்த அற்புதம்...
சிக்கிமுக்கி கற்களின் நவீன வடிவம்...
எடிசன் தவமிருந்து பெற்றெடுத்த குழந்தை
அணைத்தாலோ அணைந்தாலோ
வியர்வையினால் அழ வைக்கும்
வியக்க வைக்கும் ஆற்றல்...
தனித்திரு...
தனித்திரு...
தனித்து இரு...
தனித்தே இரு... ஆனால்
தனித்துவத்தோடு இரு...
ஊரோடு ஒத்து வாழ் என்பதுதானே
முன்னோர்களின் வாக்கு. அதனால்
தனித்திருப்பது என்பது
விலகியிருப்பதல்ல
விழிப்போடிருப்பது...
தன்பாதையில் போவதல்ல
தனிப்பாதையை உருவாக்குவது.....
தனித்திரு.... இனித்திடு...
வாழ்க்கை
வா.....
வாழ்.....
'
கை' இருக்கிறது....
இந்தக்கை
பத்துவிரல் உள்ள
சொந்தக்கை அல்ல....
எட்டமுடியாத உயரத்திற்கு
ஏற்றிச் செல்லும் நம்பிக்கை....
இன்பமும் துன்பமும்
மாறிமாறி வரும்
விசித்திர விளையாட்டு....
இருப்பதை வைத்து
இன்பமாக வாழக் கற்றுக்கொண்டால்
வாழ்க்கை இனிக்கும்...
பெண்
படைப்பவனே கடவுள் என்பதால்
கண்ணுக்கு தெரியும் கடவுள்..
ஈடில்லா ஈரெழுத்து இன்பம்....
சுமக்கத் தெரிந்த சும்மாடு
சும்மா இருக்க முடியாத சூத்திரம்...
ஆவதும் பெண்ணாலே
ஆக்குவதும் பெண்ணாலே...
அனைத்தும் பெண்ணாலே.....
தம்பி
அண்ணன், அக்கா என்ற
உறவுகளுக்கு உயிர்கொடுத்த மெய்...
அக்காக்களின் அன்புகளுக்கு
ஈடுகொடுக்க முடியாமல்
திணறும் பாசக்காரன்......
அண்ணன்களின் உழைப்புக்கு
ஆதரவுக்கரம் நீட்டுபவன்....
இந்தக் கடைக்குட்டிக்காரன்
வீட்டிலிருந்தால் எப்பேர்பட்ட
படைக்கும் பயப்பட வேண்டியதில்லை...
தம்பி உடையான் படைக்கு மட்டுமல்ல
எதற்கும் அஞ்சாதவன்..
அம்மா
உயிரும்() மெய்யும்(ம்) சேர்ந்த
உயிர்மெய்(மா) அம்மா
தூணிலும் துரும்பிலும்
இருப்பவர் கடவுள்
ஊணிலும் உணவிலும்
இருப்பவள் அம்மா
அம்மா என்றால் அன்பு
அம்மா என்றால் அளவற்ற அன்பு
அம்மா என்றால் கலப்பற்ற அன்பு
அம்மா என்றால் எதிர்பார்பற்ற அன்பு
அம்மா என்றால் அகிலம்....
இசை
இதயங்கள் பேசும் இனிய மொழி...
இம்மொழி பேசும்நேரம்
இதழ்கள் இரண்டிற்கும் முதலிரவு...
தொட்டுக்கொள்ளும்
ஒட்டிக்கொள்ளும்
கட்டிக்கொள்ளும்
நடனமாடும்
உயிரின் ஓசைகள்
இசையாய் வெளிப்படும்.....
இதயத்தின் தாலாட்டு
அறம்
அனைவரும் கண்டிப்பாக
அணிய வேண்டிய ஆடை
உடலை மறைக்கும் உள்ளாடை அல்ல.....
உள்ளத்தில் உள்ளதை
உள்ளபடி காட்டும் பட்டாடை ...
அன்பு என்ற இயந்திரத்தில்
பண்பு என்ற நூலால்
தைக்கப்பட்ட இவ்வாடை
அணிந்தவருக்கு அகத்தின் அழகை
அடுத்த ஜென்மத்திலும் அழகாக்கும். .
தோல்வி  / வெற்றி
இருவரும் நண்பர்கள்
பால்ய காலத்து சிநேகிதர்கள்
இவனில்லாமல் அவனில்லை
அவனில்லாமல் இவனில்லை
இருவரும்
ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்
என்னால் மட்டுமே என்று
வெற்றியில் வீழ்வதும்
என்னாலும் முடியும் என்று
தோல்வியில் மீள்வதும்
இயற்கையின் வரப்பிரசாதங்கள்.

 ரோஜா..
குறைமாதத்தை குதூகலப்படுத்தும்
கதாநாயகி….
தொட்டால் தீப்பற்றிக்கொள்ளும்
சிவப்பு பாஸ்பரஸ்..
பலஆயிரம் ரூபாய் நோட்டுகள்
பளபளக்கும் வைர நகைகள்
கொடுத்தாலும் கிடைக்காத திருப்தியை
ஓர் ஒற்றை ரோஜா கொடுக்கும்….
பலபேருக்கு இதைப் பார்த்ததால் பைத்தியம்
பல பேருக்கு இதைப் பார்க்காததால் பைத்தியம்..
அன்பைப் பாிமாற கிடைத்திருக்கும்
அற்புத ஆயுதம்….


மனமே....
மனமே.... உன்னைத்தான்.....
இருக்கும் இடம் தெரியாமல்
இருக்கும் இன்பமானவனே....
இன்பத்திலும் துன்பத்திலும்
இவனை சரியாக டீல் பண்ணினால்
இன்பத்தில் எளிமையாகவும்
துன்பத்தில் துணிவாகவும் இருப்பான்
கலங்காதிரு மனமே....
நீதான் எனக்கு மறமே....

No comments:

Post a Comment