ஏப்ரல் 5, இரவு 9மணியும் 9
நிமிடங்களும்.
பாரதப் பிரதமர் மாண்புமிகு.மோடி அவர்களின்
வேண்டுகோள்.
இன்று
கொரோனாவின் பிடியில் அறிவியல் உலகம் ஆடிப்போய்க்கிடக்கிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும்
இவ்வேளையில் பலநூறுபேரின் உயிரைக் கொரோனா காவு வாங்கிக் கொண்டிருக்கும்.. இந்நேரத்தில்
தம் உயிரையும் பொருட்படுத்தாது ஏராளமான மருத்துவர்களும் செவிலியர்களும் தூய்மைப்பணியாளர்களும்
வருவாய்த்துறை ஊழியர்களும் காவல்துறை நண்பர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
130கோடிக்கும் மேல் மக்கள் தொகை உள்ள ஒரு நாட்டில் ஊரடங்கு என்பது சாதாரண விசயமல்ல.
தமிழ்நாட்டின் மக்கள் தொகை கொண்ட இத்தாலி நாட்டில் இன்று கொரோனா “பெயரைக் கேட்டாலே
சும்மா அதிருதுல்ல“ என்பது போல பலபேர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டும் பலபேர் உயிரை
விட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் ஏதோ அழிவுக்கு ஆரம்பம் என்பது
போல பீதியில் உறைந்து கொண்டிருக்கிறது. பத்து ரூபாய் சோப்பு கைகளில் ஒட்டிக்கொண்ட வைரஸை
அழிக்கிறது. ஆனால் அதே வைரஸ் தொண்டைக்குள் போனால் மருந்து இல்லை என்பது அறிவியல் உலகில்
பரபரப்பான விவாதப் பொருளாகியிருக்கிறது. சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தில் சீனக்குழந்தைக்கு
ஏற்பட்ட நோயைக் கசாயம் கொடுத்து குணப்படுத்துவது போலவும் வில்லன் டாங்லீ ஒரு நாய்க்கு
ஊசிபோட்டு அந்த விஷக்கிருமியைப் பரப்புவது போலவும் கதைக்களம் அமைத்திருப்பார் இயக்குனர்
ஏ.ஆர்.முருகதாஸ். இறுதிக்காட்சியில் சூர்யாவின் ஜீனை உசுப்பி அந்த வைரஸ் கிருமியையும்
டாங்லீ எதிரியையும் அழிப்பதாக படம் முடியும். இப்போது உலகின் பார்வை தமிழகத்தை நோக்கியும்
திரும்பியிருக்கிறது. இப்படி லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் இந்த வைரசுக்கு ஏதேனும்
மூலிகை மருந்து கிடைக்குமா? என்று சித்தர்களின் வரலாற்றைத் தோண்டிப் பார்க்கிறார்கள்.
இதயத்தையே எடுத்து வேறு இதயத்தைப் பொறுத்திப் பார்த்த மருத்துவ உலகை இன்று கொசுவின்
முட்டை அளவு கூட இல்லாத கொரோனா வைரஸ் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய்கிறது.
சீனாவில் ஆரம்பித்து இன்று உலகம் முழுவதும்
மிகவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மார்ச்
22 அன்று ஊரடங்கு பிறப்பித்து அனைவரையும் வீட்டுக்குள் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தது
அரசு. அனைவரும் கடைப்பிடித்தோம். இந்த கொரோனா வைரஸின் தாக்கம் என்பது 1, 2, 4, 8, 16, 64, 256, என்ற வேகத்தில் பரவிவரும்
வேளையில் SOCIAL DISANCE எனப்படும் தனிமனித
இடைவேளிதான் வைரஸை விரட்ட வழி என்று அனைவரும் தனிமையில் வாழ்ந்து வருகிறோம். தனிமை என்பது மிகப்பெரிய கொடுமைதான்
ஆனால் கொரோனாவை விரட்ட அதுதான் வழி என்றால் நாம் கடைபிடித்துதான் ஆக வேண்டும்.
தனிமையில்
வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 144 தடை
உத்தரவு என்பது நம்மைப் பாதுகாக்க ஒரு வழி அவ்வளவே… காவல்துறை நம்மைக் கண்டிக்கிறது.
அடிக்கிறது. என்று ஏகப்பட்ட மீம்ஸ்கள்…. அவர்கள் வேற்று கிரகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்.
அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் இருக்கிறது. கொரோனா அவர்களையும் தொற்றிக்கொள்ளும்.
அவர்கள் காவல்துறை என்று கொரோனா பயப்படாது. அவ்வளவு பயத்தையும் மனதில் வைத்துக் கொண்டு
நமக்கும் வரக்கூடாது.. அதைவிட நம்மைச் சார்ந்தவர்களுக்கும் வரக்கூடாது என்று இரவுபகலாக
நம்மைக் காக்க பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
எத்தனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை
ஊழியர்கள் இன்று தம் உயிரையும் பொருட்படுத்தாது இன்று கொரோனாவை விரட்ட “சிங்கத்தின்
குகைக்குள் சென்று சிங்கத்தை விரட்டுவது போல“ கொரோனா பாதிப்பு உள்ளவர்களிடையே பணியாற்றி
அவர்களைக் குணப்படுத்துவதும் குணப்படுத்த முயற்சிப்பதும் எவ்வளவு கடினமான பணி என்பதை
நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஊரடங்கைக் கடைபிடிக்க வேண்டும்.
சரி இது நடந்துகொண்டுதானே இருக்கிறது. ஏன்
ஏப்ரல் 5 9 மணிக்கு 9 நிமிடங்கள் ஒளியேற்ற
வேண்டும். ஏன் 130 கோடி மக்கள் தொகை கொண்ட ஒருநாட்டின் பிரதமர் வேண்டுகோள் வைக்கிறார்?
கொரோனாவை விரட்டு ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி செலுத்தும் விதமாகவும் இந்தக்
கொடிய கொரோனாவை விரட்டி வாழ்வில் ஒளியேற்றும் விதமாகவும் அனைவரும் அந்த நேரத்தில் ஒளிஏற்றுங்கள்
என்று வேண்டுகோள் விடுக்கிறார். முடிந்தால் செய்வோம். இல்லையேல் விடுவோம். கார்த்திகை
தீபம் அன்று நாம் வீடுகளில் ஒளியேற்றி இருளை அகற்றி மகிழ்வோமே அப்படி…… அதைவிடுத்து
அவரின் வேண்டுகோளை மீம்ஸ்களால் கொச்சைப்படுத்த வேண்டாம். மருத்துவ உலகில் கொடிகட்டும்
வல்லரசு நாடுகளே இன்று வாயைப் பிளந்து வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. எங்கிருந்து
வருகிறது? எப்படி வருகிறது? என்ன மருந்து கொடுக்க என்று மூளையின் அத்தனைப் பகுதிகளையும்
முடுக்கிவிட்டு தடுப்பூசியைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறது. நாமும் கொஞ்ச நஞ்சமல்ல
அவ்வளவு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறோம். தனிமை, ஊரடங்கு, கட்டுப்பாடு என்று கடைப்பிடிக்கிறோம்.
இப்படித்தான் முதலில் கொரோனாவை விரட்டும்
ஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கைகளைத் தட்டுங்கள் என்றார். அவ்வளவு மீம்ஸ்கள்.
அதே அவர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நாட்டின் நிதி அமைச்சர் 170000 கோடி அளவுக்கு
சலுகைகள் வழங்குகிறார். இங்கு வீட்டுக்கு 1000 ரூபாய் என்று ஏதேனும் சொல்லிக்கொண்டே
இருக்கிறார்கள். மூன்று மாதங்கள் தவணை செலுத்த வேண்டாம் என்று ஒரு உத்தரவு.. இது ஏமாற்று
வேலை என்று பல மீம்ஸ்கள்…. அடுத்து வாடகையைக் கேட்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
இன்னும் செய்வார்கள்….. மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி செலுத்துவோம் என்பதை தயவு செய்து
அரசியலாக பார்க்காமல் முடிந்தால் ஒத்துழைப்பு தருவோம். இல்லையா ஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு
கண்களைக் மூடிக்கொண்டு தூங்குவோம். நன்றியை நமக்கு பிடித்த மாதிரி சொல்லிக்கொள்வோம்…
அவ்வளவே…
10.10…. அதான் பத்துமணி பத்து நிமிடம்..
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதா? ஆமாம் அனைத்து கடிகார கடைகளிலும் உள்ள கடிகாரங்களில்
10.10 என்றே அனைத்து கடிகாரங்களும் இருக்கும். ஏன்? ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்ட நேரம்
என்று ஒரு செய்தி.. ஆனால் அலசிப்பார்த்தால் அவர் சுடப்பட்டது இரவு 10.15 மணி.. அவர்
இறந்தது மறுநாள் காலை 7.20 மணி. அடுத்து அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி சுடப்பட்ட நேரம்
என்று ஒரு செய்தி உலா வந்தது. ஆராய்ந்து பார்த்தால் அவர் சுடப்பட்ட நேரம் பகல்
12.30 மணி… அவர் இறந்ததாக அறிவிக்கப்ட்ட நேரம் பகல் 1மணி. அடுத்து அமெரிக்கா ஜப்பானின்
ஹிரோசிமா, நாகசாகியில் குண்டு வீசிய நேரம் என்று ஒரு வதந்தி தந்தியைவிட வேகமாக பரவியது.
இதையும் ஆராய்ந்து பார்த்தால் நாகசாகியில் காலை 11.02 மணிக்கும், ஹிரோசிமாவில் காலை
8 மணிக்கும் குண்டு வீசுப்பட்டுள்ளது. ஆக 10.10 க்கு என்ன காரணம் என்று இதுவரையில்
தெளிவான காரணம் இல்லை. ஏதோ ஒரு காரணம் இருந்தால் தெரிவியுங்கள்.. நானும் தெரிந்து கொள்கிறேன்.
ஆனால் இதையெல்லாம் விடுத்து 10.10 என்பது ஒரு குறியீடு ஆகிவிட்டதல்லவா?
மின்விளக்குகளைக் கண்டிடுபிடித்த தாமஸ் ஆல்வா
எடிசனுக்கு அவரை நினைவு கூர்வதற்காக குறிப்பிட்ட நேரத்தில் மின்விளக்குகளை அணைத்து
அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இவ்வுலகில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
தன்னலம் கருதாது பொதுநலத்திற்காக உழைக்கும் ஒவ்வொரு மனிதருக்கும், ஞாயிற்றுக்கிழமை
ஓய்வெடுக்க வேண்டிய நேரத்திலும் பிறருக்காக உழைத்துக் கொண்டிருக்குமு் ஒவ்வொருவருக்கும்
நன்றி செலுத்தும் நேரமாக நாம் அந்நேரத்தைப் பயன்படுத்துவோம்.
அதேபோல் கடிகாரம் என்றால் காந்தியைச் சொல்லாமல்
எப்படி முடிப்பது. கடிகாரம் அறிமுகமாகிய அந்தக் காலக்கட்டங்களில் அவரின் சகோதரர் காந்திக்கு
நொடிமுள் இல்லாத ஒரு கைக்கடிகாரத்தை வாங்கித்தந்திருக்கிறார். மகாத்மா லண்டனில் சென்று
படிப்பதால் தேவைப்படுமே என்று அவரின் சகோதரர் வாங்கித்தந்திருந்தார். லண்டனில் பயணித்த அந்தக் கடிகாரம் அவரின் இறுதி
மூச்சு விடும் முன்பே 5.17 மணி என்று காட்டியவாறு இன்றும் காட்சிப்பொருளாக இருக்கிறது.
இப்படி மணிக்கும் நமக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
சில குறிப்பிட்ட நேரங்களையும் நாட்களையும் நினைவு கூர்வது என்பது நமக்கு மிகவும் மகிழ்ச்சி
அளிக்க கூடிய நிகழ்வு. நாம் பிறந்த நேரத்தைத் துல்லியமாக எழுதி அதை வைத்துதான் ஜாதகத்தைக்
கணித்து … இப்படி நேரம் என்பது நமக்கு ஒரு வரப்பிரசாதம். நிழலைக் கொண்டே நேரத்தைக்
கண்டறிந்தது நம் முன்னோர்களின் திறன்.
இன்று கொரோனாவின் பிடியில் சிக்கிக் கொண்ட
நாம் அதை ஒழிக்க பாடுபடும் ஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அந்நாளின் அந்நேரத்தைக்
கடைபிடிப்போம். வேண்டாம் எனில் விட்டுவிடுவோம்.
அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு பதிவு இது..
இதை வைத்து நீங்களாக ஏதேனும் ஒரு முடிவு கட்டிக்கொண்டால் அதுவும் ஒரு
…………………………………… .. நன்றி.
ஒரு
இந்தியக் குடிமகனாக… கொரோனாவை விரட்ட ஏதேனும் செய்ய முடியுமா? என்று சிந்திப்பவனாக….
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் உதவி செய்ய முடியுமா? என்று சிந்திக்கும் சராசரி
இந்தியக் குடிமகனாக………
No comments:
Post a Comment