Wednesday, August 11, 2021

கண்ணம்மா தொடரும்..... குழந்தைகளின் பண்புகளும்....

 

நல்லா இருக்கேன்னு பார்த்தா… அது….பாரதி கண்ணம்மா நெடுந்தொடர்…

          வாங்க அந்த நெடுந்தொடரின் ஒரே எபிசோடு.. அதான் வீட்டில் அவ்வப்போது அனைவரும் பார்க்கும் பாரதி கண்ணம்மா நெடுந்தொடரில் நான் நேற்று பார்த்ததை சொல்கிறேன். நேற்று பார்த்தது நாடகம் அல்ல.. இணைய வழி வகுப்பு அதனால் எனக்கும் ஆர்வம் தொற்றியது.. அதை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி.

          வீட்டில் இந்த தொடர் போட்டதும் எல்லாரும் பார்ப்பார்கள். அதிலும் கண்ணம்மாவிற்கு இரட்டைக் குழந்தைகளாமே அக்குழந்தகள் வந்தால் ஆர்வமாக பார்ப்பார்கள். நான் கண்ணம்மா பேக் தூக்கிட்டு நடந்து செல்றப்ப பார்த்தன்.. அன்னைக்கு ஓ பரவாயில்லையே இந்த தொடர்.. கணவன் கைவிட்டதும் தனியாக தன்னால் வாழ முடியும் னு நினச்சி ஒருத்தி வீட்ட விட்டு வெளியேறி போறாளே.. அப்ப இந்த தொடர்ல ஏதோ இருக்குன்னு நினச்சேன்.. அதனால எப்போதாவது பார்ப்பேன்.. குட்டீஸ்களோட….

          அந்தக் கண்ணம்மா இருக்கே கண்ணம்மா.. எப்ப என்னா நடிப்பு நடிக்கு… ஓவர் நடிப்புடா… வாய்ப்பிருக்கு திரையுலகில்.. அதுவும் இல்லாம அந்தக் கன்னகுழியில் கண்டிப்பாக ரசிகர்கள் விழுந்துவிடுவார்கள். அடுத்து பாரதி .. டாக்டர்.. குடிகார டாக்டர்… அய்யோ அந்த கண்ணம்மாவின் மாமியார் இருக்கே.. அய்யோடா… உலகமகா நடிப்புடா சாமி… மருமகளை இப்படி மெச்சிர மாமியார் எங்கும் இல்லை.. இருக்கப்போவதும் இல்லை… என்னா அக்கறை அட அட அட… மருமகள் வேலை செய்ற இடத்துல கண்காணிப்பு கேமிரா மாட்டி அத வீட்டில் இருந்து ரசக்கிற மாமியார்… இது ஒண்ணு போதாதா..

          மாமியார்களே கொஞ்சம் கண்ணம்மா மாமியார பாருங்க.. ஆனா பாருங்க இந்த கண்ணம்மா அந்த மாமியார பிரிஞ்சி வாழுது.. ஒருவேளை இப்படி இருக்குமோ மாமியார் நல்லா இருந்தா மருமகள் சரி இல்லை.. மருமகள்  நல்லா இருந்தா மாமியாருக்கு சாமி வந்துடுது.. சரி விடுங்க.. குடும்பத்துல இதுலாம் சகஜம் தான…

          மாமியார் ஏன் தெரியுமா சண்டை போடுறாங்க.. வீட்டில் என்னைச் சமாளித்து விட்டால் நீ வெளி உலகில் யாரை வேண்டுமானாலும் சாளித்து விடலாம்.. அதற்கான பயிற்சிதான் மாமியார் மருமகளிடம் சண்டை போடுவது.. அதனால்  சண்டைகள் நடக்கட்டும்..

          அய்யோ நாம பாதை மாறிட்டோமே…. நாம சொல்ல வந்த கதை என்ன தெரியுமா? குட் டச்.. பேட் டச்… டோண்ட் டச்….

          பெண்களை இன்பத்தைக் கொடுக்கும் போதைப் பொருளாக நினைக்கும் உலகில் அவர்களிடமிருந்து தன்னைக்  காத்துக்கொள்ள ஒரு பெண் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.

          முதலில் வீட்டில் உள்ள உறவினர்களிடமிருந்து தன்னைக் காப்பதே பெரிய வேலை அவளுக்கு.. பூனை இருக்குல்லிலையா பூனை.. அது என்ன செய்யும் தெரியமா? குட்டி போட்டவுடன் அந்தக் குட்டிகளை வாயில் கவ்விக்கொண்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கும்.. அங்கும் பாதுகாப்பில்லை என்று தெரிந்தால் அடுத்த இடத்திற்கு கொண்டு போகும். இப்படி பாதுகாப்பிற்கா அடிக்கடி இடத்தை மாற்றும். பெண்களும் பாதுகாப்பிற்காக என்னவெல்லாம் தாங்க வேண்டியிருக்கிறது.

          வீட்டில் உறவினர்கள் தொல்லை என்றால் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் எதிர்த்த வீடு, பக்கத்துவீடு, ஆபீஸ், பேருந்து நிறுத்தம் என சந்திக்கும் அத்தனை பகுதிகளிலும் ஆண்களால் துன்புறுத்தப்படுகிறாள். பெண்களுக்கு எதிரிகள் பெண்களே இருக்கும் அதிசயமும் அப்பப்ப நடக்கும். இந்த நிர்மலா தேவிக்கள் மாதிரியான ஆட்கள்.

          சரி தொடரருக்கு ஏற்றார்போல் தொடர்கதையால்ல போய்ட்டு இருக்குன்னு நினச்சிடாதீங்க…. வந்துட்டேன் விசயத்திற்கு.. நேத்து கண்ணம்மா அவளேட குழந்தைகளுக்கு .. குட் டச்.. பேட்.டச் சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க.. இத குழந்தைகள் பார்ப்பாங்கள்ள.. நல்ல விசயம்.. அத ஒரு பொம்மய வச்சி தொட்டுக் காமிச்சி இங்க தொட்டா குட் டச… இங்க தொட்டா பேட் டச் னு அழகா சொல்லிட்டே இருப்பாங்க… அப்ப பாரதி வந்து அவரு பங்குக்கு… இப்பலாம் சில நேரங்கள்ளல டோண்ட் டச்தான் சொல்லிக் கொடுக்கனும்னு சொல்லிக்காடுப்பாரு…

நல்ல சீன்… குழந்தைகளுக்கு இதைக் கட்டாயம் சொல்லிக் கொடுக்கனும்..

          அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்வாங்க.. அதே மாதிரி சில ஆண்களின் கண்களுக்கு பார்க்கும் பெண்களையெல்லாம் அடையத் துடிக்கும் ஆசை வரும்… ஆசை வந்துட்டாலே அடுத்து என்ன செய்வான் திட்டம் போடுவான்.. எப்படி ஏமாத்தலாம்.. பெண்கள் எதுக்கு அடிமை.. எங்கெல்லாம் போறா… அவளின் ஆசை என்ன.. அவளுக்கு என்ன பிடிக்கும்.. என்ன பிடிக்காது னு பெரிய பிஎச்டி யே பண்வான்… அத விட அவளுக்கு எது தெரியாதோ அதை முதலில் இவன் தெரிந்து கொள்வான்.. இந்த ஆராய்ச்சிய அவன் பாடத்துல பி.எச்.டி பண்ணியிருந்தா பதவி உயர்வாவது வேலை வாய்ப்பாவது கிடச்சிருக்கும்.

          அப்படி ஆராய்ச்சி பண்ணி அவளை அடைய திட்டமிடும்போது சில பெண்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள்… சில பெண்கள் அகபட்டுக் கொல்கிறார்கள்.. சில பெண்கள் எதிர்க்கிறார்கள்..

          இந்த எதிர்க்கும் பெண்களை அவன் வக்கிர புத்தியோடு அணுகுகிறான். அதான அசீட் வீச்சு… கற்பழிப்பு… இப்படியெல்லாம் நடக்கு…

          அதவிட வேலைக்குப் போகும் பெண்கள் படும் அவஸ்தை இருக்கே அய்யய்யோ…. அதுவும் மேலதிகாரிகள் ஆண்களாக இருந்து விட்டால் அவ்வளவுதான் அவரு சொல்ல தட்டவும் முடியாம செய்யவும் முடியாம எப்படியாவது அவர தவிர்த்துவிட்டு வீட்டுக்கு வருவதற்குள் போதும் போதும்னு ஆயிடுது… இதுல பெண் அதிகாரிகள்னா அதுக்கும் மேல..

          ஆக என்ன சொல்ல வற்றேன்னா.. இவ்வளவும் நடக்குமா அய்யய்யோ னு வீட்டிலே முடங்கியிராதீங்க…. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு னு நினச்சிடாதீங்க.. அது ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒண்ணுமில்லாதகாலத்துல…தைரியமாக வெளில வாங்க… அறிவியல் உலகம் உங்களுக்கு கை கொடுக்கும்.. குழந்தைகள்ளே சொல்லி சொல்லி வளருங்க குழந்தைகள…

          எங்க சிரிக்கனுமோ அங்க சிரிக்கனும்.. எங்க முறைக்கனுமோ அங்க முறைக்கனும்.. எங்க அழனுமோ அங்க அழனும்.. எங்க அடிக்கனுமோ அங்க அடிக்கணும்… இதெல்லாம் சொல்லித்தாங்க.. ஏமாத்துறவன எகிறி எகிறி அடிங்க… ஒருத்தங்க அடிக்கிற அடி தப்பு செய்யற ஒவ்வொருத்தன் மேலயும் விழனும்.

          அலுவலகத்தில் தொல்லையா முதலில் கண்காணிப்பு கேமிராக்களைப் பொருத்தச் சொல்லுங்க… அதிகாரிகள் தொல்லையா அப்படியே ஷ்கிரீன் சாட் போடுங்க… நம்ம ஆளு மானத்துக்கு மட்டும்தான் பயப்படுவான்.. அடுத்து ஆளே இல்லாத கண்காணிப்பு கேமிராக்களுக்கு பயப்படுவான்… நாம கத்திய தூக்குன அவன் அருவாவ தூக்குவான்.. நாம அறிவயல தூக்குனா அடங்கிப்போவான்…

          இத படிச்சிட்டு எல்லா ஆண்களையும் கெட்டவங்கனு சொல்றாப்ல வாத்தியார்னு தப்பா நினச்சிராதீங்க… ஆண்கள்… பலபேர் அன்பாகவும் பாசமாகவும் இருப்பாங்க… ஏங்க போலியான கண்கள் எதுன்னு உங்களுக்கு கண்டு பிடிக்க முடியாது.. அழகா கண்டுபிடிக்கலாம்..

          நிறைய ஆய்ட்டு.. இத சொல்லி முடிக்கிறேன்.. ஜொல்லு விட்ட மேலதிகாரிக்கு பிறந்த நாள் பரிசு கொடுக்க, முந்தின நாள் இரவு தன்னுடைய வீட்டுக்கு வரச்சொல்கிறாள் அந்த சராசரி பெண்.. வீட்டில் யாரும் இல்லாத அந்த நாளில் வர சொல்கிறாள்.. ஜொல்லு ரெடியாகுது.. அதுவும் வீட்டில் யாருமே இல்லை.. கேக்கவா வேணும்.. நகத்துக்குள்ள வரைக்கும் சென்ட் அடிச்சிட்டு போறார் இரவு எட்டு மணிக்கு…

          ஆளில்லாத அந்த வீட்டில் அன்றைய இரவு உணவைத் தயாரிக்கச் சொல்வதாகக் கூறிவிட்டு இவரை ஒரு அறையில் தொலைக்காட்சி பார்க்கவைத்துவிட்டு செல்கிறார்.

          இவர் மன்மதக் கனவுகளோடு தொலைக்காட்சிகளில் கிளுகிளு காட்சிகளைத் தேட அந்த சராசரிப் பெண் சமையல் செய்ய.. நேரம் பத்தை நெருங்குகிறது… இவர் சலலாபத்தோடு சமையலறைக்கே வந்து விடுகிறார். அந்தப்பெண்ணோ பொறுங்கள் இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது உங்களின் பிறந்த நாளுக்கு என்று சொல்லி ஒரு அறையில் வைத்து அடைத்துவிட்டு சமையலைக் கவனிக்கிறாள்.. நான் அழைக்கும் போது வந்தால் போதும் என்று சொல்லி செல்கிறாள்.

          இவருக்கு ஆசையும் மோகமும்அதிகரிக்க தன்னையே மறக்கிறார். தயாராகிறார் மன்மத யுத்தத்திற்கு.. மணி பன்னிரண்டை நெருங்குகிறது.. வீட்டில் கொலுசு சத்தம் அங்கும் இங்குமாக கேட்டு கடைசியில் இவர் இருந்த அறைப் பக்கம் கேட்கிறது… இவர் ஆயத்தமாகிறார்… வந்தவர் திறந்து ஆசையில் கட்டிஅணைக் முற்பட .. அடுத்த அறைக்குள் காத்திருப்பதாகச் சொல்லிச் செல்கிறாள் அடுத்த அறைக்குள்.

          இவருக்கோ மோகம் முட்டிக்கொண்டு வருகிறது.. அதற்கான தடை இப்போது  ஆடைகள் மட்டுமே களைந்தெறிந்து அடுத்த அறைக்குள் மின்னல்வேகத்தில் பாய்கிறார் உடை ஒன்றும் இல்லை….

          இவர் பாய்ந்ததும் மின்விளக்குகள் ஒளிர்கின்றன.. நடு அறையில் பிரமாண்டமான கேக்குடன் இவருடன் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் ஆண்களும் பெண்களுமாக சுற்றி நிற்கிறார்கள். ஹேப்பி பர்த்டே டூ யூ சத்தம் காதைக் குடைய…. இவரோ அம்மணமாக பிறந்தநாள் அன்று பிறந்த மேனியோடு நிற்கிறார்… இதற்கு மேல் என்ன நடந்திருக்கும் உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

          தொடர்கள் சில நல்லவற்றையும் சொல்லித் தருகின்றன… அதை மட்டும் எடுத்துக் கொள்வோம்… நன்றி….

         

வாழ்க்கைத் திறன் கல்வி

 தன்னை அறிதல்

"நீ உன்னை அறிந்தால்....

நீ உன்னை அறிந்தால்...
உலகத்தில் போராடலாம்...
உயர்ந்தாலும், தாழ்ந்தாலும்....
தலை வணங்காமல் நீ வாழலாம்".

தன்னுடைய நிறைகள், குறைகள், மதிப்பீடுகள், பார்வைகள், குணங்கள், தேவைகள், ஆசைகள், கனவுகள், உணர்வுகள் என்று அனைத்தையும் உணர்ந்து கொள்ள உதவும் திறனே தன்னை அறிதல் திறன் ஆகும்.

தன்னைப் பற்றி இவ்வாறு முழுமையாக அலசி, ஆராய்ந்து உணர்ந்த பின்னரே எந்தச் செயல்பாட்டிலும் ஈடுபட முடியும். தன் உணர்வுகள் பற்றி முழுமையாக உணர்ந்து கொண்டவர்களால் தான் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ முடியும்.

பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்த்தல்:

தன் உணர்வுகளை நங்கு உணர்ந்து கொண்ட ஒருவரால் தான் மற்றவர்களின் உணர்வுகளை உணர இயலும். அப்படி உணரும் பொழுது அவர்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் சரிவரப் புரிந்து கொள்ளலாம். இதனால் நமக்கும், பிறருக்குமான புரிதல் வழுப்பெறுகிறது.

அனைவருக்கும் இருக்க வேண்டிய பண்பு பிறரை விமர்சனம் செய்யாமல் இருப்பதுதான். எவரையும் புரிந்துகொள்ளாமல் விமர்சனம் செய்வது என்பது எளிது. ஆனால் அது மிகவும் தவறான செயலாகும். ஒருவரைத் தெரிந்து கொள்வதற்க்கு அவர் நிலையில் நின்று, அவர் செயல்படுகளைப் புரிந்து கொள்வதே சிறந்த வழியாகும்.

ஒருவொருக்கொருவர் உறவு முறை:

எல்லோருக்கும் ஏதாவது ஒரு நெருக்கமான உறவில் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறோம். அப்பா மகன், அப்பா மகள், தாத்தா பாட்டி, சித்தி அத்தை, மாமா நண்பர்கள் இவ்வாறு பல நெருக்கமான உறவுகளில் இருந்து கொண்டே இருக்கிறோம்.


இந்த நெருக்கமான உறவுகளைத் தொடர்ந்து ஆரோக்கியமான உறவாகப் பாரமரிக்க வேண்டியிருக்கிறது. ஒருவொருக்கொருவர் உறவோடு பழகும் திறன் மூலம், நம்மால், நெருக்கமானவர்களுடன் தொடர்ந்து நல்ல விதமாக உறவுகளை கையாள முடிகிறது. இது நம்ம மனதை ஆரோக்கியமாக வைத்து இருக்க உதவுவதோடு, சமுதாயத்திலும் நன் மதிப்புடன் செயல்பட உதவுகிறது.

சிறப்பாகத் தொடர்பு கொள்ளும் திறன்:

நாம் மற்றவர்களோடு தொடர்ந்து உரையாடுகிறோம். இதை நம்மால் எல்லா நேரங்களிளும் சிறப்பாகச் செய்ய முடிகிறதா ? நாம் நினைப்பதைச் சரியாக வழிப்படுத்த நமக்குத் தெரிய வேண்டும். எல்லாவற்றையும் வார்த்தைகளால் தான் வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. நம்முடைய அமைதிகூட ஒரு மொழியாகும். உடல் செய்கைகள், அசைவுகள் மூலம் நாம் நினைத்ததை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தலாம்.

உரையாடலுக்கு சொற்களும், உடலைசைவும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பிறர் பேசும் போது காது கொடுத்து பொறுமையாக கேட்பதாகும். கேட்டல் என்பது ஒரு கலை. உற்றுக் கேட்பது பேசுபவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை ஆகும்.


சிந்திக்கும் திறன்கள்:

கூர்சிந்தனைத் திறன்:

வாழ்க்கை நிகழ்வுகள், தகவல்கள் முதலியவற்றை எந்தச் சார்புமின்றி நடுநிலையோடு பகுத்தாய்வும் திறனே கூர்சிந்தனைத் திறனாகும். நம்முடைய சிந்தனைச் செயல்பாடு இவற்றைத் தீர்மானிக்கும் காரணிகளை எடைபோட இக்கூர்சிந்தனைத் திறன் உதவுகிறது.

ஒத்த வயதினரின் தாக்கம், மக்கள் தொடர்பு சாதனங்களின் தாக்கம், ஆகியவற்றால் அலைபாயும் மனத்தை நன்னிலைப்படுத்த கூர்சிந்தனைத் திறன் உதவுகிறது.

எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான் சிறந்த முடிவுகளை எடுப்பதற்குக் கூர்சிந்தனை திறன் பயன்படும். எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் என்னென்ன, விளைவுகள் அனைத்தும் நம் விருப்பம் போல் அமையுமா, எனச் சிந்தித்துச் செயல்படக் கூர்சிந்தனைத் திறன் பயன்படுகிறது.

படைப்பாற்றல்:

வாழ்க்கையில் அன்றாடம் எதிர் கொள்ளும் நிகழ்ச்சிகள், சூழல்கள், சவால்களை நம்முடைய நேரடிப் பட்டறிவின் வாயிலாக மட்டுமே கையாளாமல், அவற்றையும் தாண்டிய சிந்தனையோடு கையாள உதவும் திறனையே படைப்பாற்றல் திறன் என்கிறோம்.

எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான தீர்வுகளைப் பல்வேறு கோணங்களில் சிந்தித்து முடிவெடுப்பதற்க்கு படைப்பாற்றல் திறன் தேவைப்படுகிறது.

முடிவெடுக்கும் திறன்:

இந்தத் திறன் ஆக்கப்பூர்வமான முறையில் முடிவுகளை எடுக்க உதவுகிறது.

நாம் எடுக்கும் வெவ்வேறு விதமான முடிவுகள் இவற்றால் ஏற்படும் தாக்கங்கள் முடிவெடுக்கும் திறங்களைப் பொறுத்தே அமைகின்றன.

குறிப்பாக வளரிளம் பருவத்தினர், முன் பின் சிந்திக்காமல் செய்யக்கூடிய சில செயல்கள், அவர்களின் உடல் நலத்திற்க்கு கேடு விளைவிக்கும். முடிவெடுக்கும் திறனை ஒருவர் பயிற்சியால் பெற்று விட்டால் அவருக்கு வானமே வசப்படும்.

பிரச்சனைகளுக்குத் தீர்வு காணல்:

நாம் வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமான வழியில் கையாளவும், தீர்க்கவும் இத்திறன் உதவுகிறது.

பிரச்சனைகளைக கையாளாமலேயே விட்டுவிட்டால், அது பலவிதமான மன அழுத்தங்களையும், உடல் சார்ந்த சங்கடங்களையும் உருவாக்கும்.

இந்த திறன் நம் பிரச்சனைகளைக் கையாளும் வல்லமையை அளிப்பதோடு அவற்றை நம்முடைய வாய்ப்புகளாக மாற்றும் சந்தர்ப்பத்தையும் தருகிறது.

பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன், நம் உணர்வுகளையும் அழுத்தங்களையும் சமாளிக்க உதவுவதோடு, முடிவுகளை எடுக்கவும் உந்து சக்தியாக அமையும்.


உணர்வுகளுடனான சமரசத் திறங்கள்:

உணர்வுகளுக்கு ஈடு கொடுத்தல்:

எண்ணங்களின் வெளிப்பாடுகளே உணர்வுகள், நமக்குள் இருக்கும், உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், இத்திறன் உதவுகிறது. மேலும் நம் உணர்வுகளை செயல்பாடுகளை எப்படியெல்லாம் பாதிக்கின்றன் என்பதை உணர்ந்து கொள்ளவும், உணர்வுகளை சரியான முறையில் எதிர்கொள்ளவும் இத்திறன் பெற்றிருப்பது இன்றியமையாததாகிறது


மன அழுத்தங்களுக்கு ஈடு கொடுத்தல்:

மன அழுத்தம் என்பது ஒவ்வாத எண்ணங்கள், சிந்தனைகள், செயல்களால் ஏற்படும் மனநிலை. அதாவது ஒதுங்கியிருத்தல் கோபங்கொள்ளுதல் சமுதாய ஊட்டமின்னை, மன உளைச்சல் முதலியவற்றை சான்றாக கூறலாம்.

இவ்வாறு ஏற்படும் மன அழுத்தங்களைக் குறைக்கவும், அறவே போக்கவும் அதற்கான காரண காரியத்தைத் சிந்திக்கவும் ஆற்றல் வேண்டும்.

இத்தகைய மன அழுத்தத்திலிருந்து வெளியேறுவதற்கு மனத்தை நல் வழியில் திசை திருப்புவதும், சமுதாய நிகழ்வுகளில் கலந்து கொள்வதும், படைப்பாற்றலில் ஈடுபடுவதுமே சிறந்த வழிகளாகும்.

இவ்வாறு செய்யும் பொழுது மன அழுத்தத்தால் ஏற்படும் தீய விளைவுகள் குறையும், மன அமைதி கிட்டும்.


வாழ்க்கைத் திறன்களை ஒருங்கினைத்தல்:

வாழ்க்கைத் திறன் கல்வியின் பத்து அடிப்படைத் திறன்களையும் தனித்தனியாகத் தெரிந்து கொண்டபின்,அவற்றை ஒருங்கிணைத்தும் தொடர்புபடுத்தியும் செயல்படுத்தத தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

எடுத்துக் காட்டாகத் தன்னை அறிதலும், கூர்சிந்தனைத் திறனுமாகிய இரண்டும் இணையும் பொழுதுதான் நம்மை புரிந்து கொள்ள முடியும். அதே போல் நமக்கென்று இலக்குகளை வரையறுத்துக் கொள்வதற்குத் தன்னை அறிதல், கூர்சிந்தனைத் திறன், படைப்பாற்றல் திறன் ஆகிய மூன்றும் இணைந்த திறன் வெளிப்பாடு அவசியம்.

தன் உயர்வுகளைப் பிறருக்கிச் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டுமென்றால், அவருக்குக் கூர் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் திறன், தன்னை பிறர் நிலையில் வைத்துப் பார்க்கும் திறன் வேண்டும்.

வாழ்க்கைத் திறன் கல்வியின் பயன்கள்:

வளரிளம் பருவத்தினர் மனத்தையும், உடலையும் நலத்துடன் வைத்திருக்க வாழ்க்கைத் திறன் கல்வி பெரிதும் பயன்படுகிறது. இத்திறன்கள் பெறுவதால்,


ஆளுமை நிறைந்தவர்களாக உருவெடுப்பார்கள்.

பிறருடன் கருத்து ஒருமித்துப் பணியாற்றுவார்கள்.

சிந்தித்து முடிவெடுப்பார்கள்.

தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வார்கள்.

இலக்குகளை அமைத்துக் கொண்டு அவற்றை அடையப் பாடுபடுவார்கள்.

இலக்குகளை அடைவதற்காக மேற்கொள்ளும் முயற்சியின் போது ஏற்படும் மன அழுத்தங்களையும், சிக்கல்களையும் எதிர் நோக்கி தீர்வுகாணும் வழி முறைகளைக் கண்டறிந்து வெற்றி வாகை சூடுவார்கள்.

பேச்சுக்கலை:

பேச்சு என்பது ஒரு கலை:

1. உண்மையே பேசுக.
2. நன்மையே பேசுக.
3. அன்பாக பேசுக.
4. மெதுவாகப் பேசுக.
5. இனிமையாகப் பேசுக.
6. சிந்தித்துப் பேசுக.
7. சமயமறிந்து பேசுக.
8. சபையறிந்து பேசுக.
9. பேசாதிருந்தும் பழகுக.


வழி-1: ஒழுக்கம்


சுய மதிப்பு:

பெற்றோரை மதித்தல், பெற்றோர் மற்றும் அறிஞர்கள் சொல் கேட்டல், படிப்பில் ஆர்வம், ஆக்கத் துறையில் ஈடுபாடு, உழைப்பு, முயற்சி, உண்மை, இலக்கு நிர்ணயித்தல், மதிப்பு நல்ல எண்ணங்கள் விளைவு...வெற்றி மற்றும் பிரகசமான வாழ்க்கை.

வழி-2: ஒழுக்கமின்மை


சுய மதிப்பின்மை:

இனக் கவர்ச்சி, ஆத்திரம், பொய் பேசுதல், திருடுதல், மதிப்பின்மை, முயற்சியின்மை, பெற்றோருக்கு கீழ்படியாமை, படிப்பில் ஆர்வமின்மை, கோபம், சோம்பல், பாட்டு மற்றும் கேளிக்கைகளில் அதிக ஆர்வம் தோல்வி விளைவு இருள் அடைந்த வாழ்க்கை.